சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவடைந்தவுடன் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்த நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்துக் கட்டணம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வரும் ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும் என மெட்ரோ ரயில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டபோது 2009ஆம் ஆண்டு கட்டண நிர்ணயக் குழு ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்தக் குழு புதுடில்லி மெட்ரோ ரயில் கட்டணத்துடன் ஒப்பிட்டு கட்டணத்தை நிர்ணயம் செய்யத் தொடங்கியது.

ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையின்படி, குறைந்தபட்ச மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணம் ரூ.10 என இருக்கும் என்றும் கிலோ மீட்டருக்கு ஏற்ப அதிகபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கட்டண விவரம் குறித்து முழுவிபரங்கள் ஜூலை மாதத் தொடக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.

இப்போதுள்ள விலைவாசி ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ ரயிலுக்கான கட்டணம் ரூ.10, ரூ.15, ரூ.20, ரூ.30, ரூ.35, ரூ.40 என்ற அளவில் கிலோ மீட்டருக்கு ஏற்ப வசூலிக்கப்படும் என்றும் மெட்ரோ ரயில் பயணத்துக்கு டோக்கன், ஸ்மார்ட் கார்டு என இரு வகையான டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறிய அவர் அத்துடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய சலுகையுடன் கூடிய சீசன் டிக்கெட் வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

English Summary : After R.K.Nagar by-election Chennai metro rail will be opened. Its fees will be announced in July.