இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் இருப்பது போன்று தமிழகத்திலும் பி.எட். படிப்புக் காலம் வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆணை ஒன்றை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையிலும், மத்திய அரசின் அனுமதியுடனும் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் (என்சிடிஇ) வெளியிட்டது. இந்த புதிய வழிகாட்டுதலின்படி நாடு முழுவதும் பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. வரும் 2015-16 கல்வியாண்டு முதல் இது அமலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பெரும்பாலான மாநிலங்கள் இதை ஏற்றுக்கொண்டது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இதற்கு எதிராக வழக்குப் பதிவு செய்தன. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், வரும் கல்வியாண்டு முதல் பி.எட். படிப்புப்பிற்கான காலம் நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுவதில் என்.சி.டி.இ. உறுதியாக இருந்தது.
வழக்கு பதிவு செய்யப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் மட்டும் வரும் கல்வியாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஒரு ஆண்டாக இருக்குமா அல்லது இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்படுமா என்ற குழப்பத்தில் மாணவர்கர்கள் இதுவரை இருந்தனர்.

இந்நிலையில் மாணவர்களின் குழப்பங்களை தீர்க்கும் வகையில் வருகிற 2015-16 கல்வியாண்டு முதல் இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், ஜூலை முதல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எட். படிப்புக் காலம் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகளாக உயர்வது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசின் இந்த உத்தரவை அடுத்து என்.சி.டி.இ.-இன் புதிய வழிகாட்டுதல், புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மதுரையில் வருகிற 26ஆம் தேதியும், திருநெல்வேலியில் ஜூன் 27ஆம் தேதியும், கோவையில் ஜூன் 29ஆம் தேதியும் சேலத்தில் ஜூலை 1, திருச்சியில் ஜூலை 2, சென்னையில் ஜூலை 3 ஆகிய தேதிகளிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள அனைத்து ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தலைவர், செயலர், முதல்வர் ஆகியோர் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்றும் கல்லூரிகள் சார்பில் பிரதிநிதிகள் அனுப்பப்படக் கூடாது என்றும் அவ்வாறு பங்கேற்கத் தவறும் கல்லூரி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது.

English Summary : B.Ed. course duration has been increases for 2 years from 2015 – 2016 batch.