டிப்ளமோ மற்றும் பி.எஸ்சி., படித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான மாநில அளவிலான கவுன்சிலிங் காரைக்குடி அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வரும் 26ஆம் தேதி தொடங்குவதாக அழகப்பா பொறியியல் கல்லூரி முதல்வர் அ.மாலா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் 533 பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்காக 1 லட்சத்து 16 ஆயிரத்து 234 இடங்கள் காலியாக உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 34 மையங்களில் மே 12ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதில் 19 ஆயிரத்து 629 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தற்போது www.accet.co.in என்கிற கல்லூரி இணையதளத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஜூன் 26ஆம் தேதி தொடங்கி ஜூலை 9ஆம் தேதி மாலை நிறைவடைகிறது. கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் கவுன்சிலிங் நடைபெறும். பி.எஸ்சி., கணிதம் படித்தவர்கள் மட்டுமின்றி, பிளஸ் 2வில் கணிதம் படித்திருக்கும் மற்ற பட்டப்படிப்பு படித்த மாணவர்களும் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு அ.மாலா அவர்கள் கூறியுள்ளார்.
English Summary : B.E, B.Tech direct second year counseling date announced for students who finished Diploma and B.Sc.