பொறியியலில் பட்டம் பெற வேண்டும் என்ற கனவோடு பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்துவிட்டு கலந்தாய்வுக்கு செல்லவிருக்கும் மாணவர்கள், கலந்தாய்வுக்கு செல்லும் முன் தங்களை முதலில் தயார்படுத்தி கொள்ள வேண்டும். எந்த கல்லூரியில் சேர்வது என்ற குழப்பத்தை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அதிக கட் ஆப் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. அண்ணா பல்கலைக்கழகம் அல்லது அரசு பொறியியல் கல்லூரிகளில் அவர்களுக்கு மிக எளிதில் இடம் கிடைத்துவிடும். ஆனால் அதற்கு குறைவான கட் ஆப் பெற்ற மாணவர்கள், கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஆகியவற்றை தேர்வு செய்வதில் கவனம் தேவை.

எந்த கல்லூரியில் சேரவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவு செய்து அந்த கல்லூரிக்கான கோட் எண்ணை குறித்து வைத்து கொண்டால் கடைசி நேரத்தில் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்கலாம். ஒருசில பெயர்களில் நான்கைந்து கல்லூரிகள் இருக்கும். இந்த குழப்பத்தை தவிர்க்க அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள கல்லூரிகளின் பட்டியலை முதலில் பார்த்து குழப்பத்தை தெளிவு செய்து கொள்ள வேண்டும். இந்த இணையதளத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மாவட்ட வாரியாகப் பட்டியல் போடப்பட்டிருக்கும். மேலும் ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை-2015, மாணவர்களுக்கான தகவல் மற்றும் வழிமுறைகள்’ என்ற வழிகாட்டிக் குறிப்புகளையும் கவனமாக படித்து தெரிந்து கொள்ளவும்.

மேலும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட நாளில் வரமுடியாமல் போனால் என்ன செய்வது, கலந்தாய்வு நேரத்தில் சரியான சான்றிதழை கொண்டு வரவில்லை என்றால் என்ன செய்வது போன்ற விபரங்களையும் அண்ணா பல்கலைக்கழக இணையதளமான https://www.annauniv.edu/tnea2015/ என்ற இணையதளத்தில் முன்கூட்டியே படித்து தெரிந்து வைத்து கொள்வது நல்லது.

கலந்தாய்வுக்கு வருபவருக்கும், அவருடன் வரும் ஒருவருக்கும் அரசு பேருந்துகளில் 50% கட்டண சலுகை உண்டு. கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதத்தை நடத்துனரிடம் காண்பித்தால் இந்த சலுகையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் கலந்தாய்வுக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருசில மணி நேரங்கள் முன்னரே சென்றால் கலந்தாய்வின் போக்கு மற்றும் காலியிடங்களின் இருப்பை அறிந்து நமது முடிவை தெளிவுடன் எடுக்கலாம்.

தனியார் கல்லூரிகளின் தரகர்களை கண்டிப்பாக தவிர்ப்பதோடு, ஆளாளுக்கு சொல்லும் கருத்திற்கேற்ப முடிவை மாற்றிக் கொள்ளாமல் தீர்க்கமான தெளிவான முடிவை எடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

மேலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளும்போது அசல் சாதிச் சான்றிதழ் மற்றும் முதல் தலைமுறை பட்டதாரிக்கான சான்றிதழ் போன்றவற்றைச் முறைப்படி அடுக்கி வைத்தால் நமது சலுகைகளை பெற எளிதாக இருக்கும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் எஸ்.சி, எஸ்டி உள்பட அனைத்து பிரிவினர்களும் தங்களுக்குரிய கட்டணத்தை தற்காலிக வங்கி கவுண்டர்களில் செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொள்ளலாம்.

சுமார் ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்டந்தாக இருக்கும் கலந்தாய்வுக் கூடத்தில், கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள காலியிடங்கள் குறித்து பாடப்பிரிவு, இட ஒதுக்கீடு வாரியாக அறிந்துகொள்ள பெரிய கணினித் திரை வைக்கப்பட்டிருக்கும். கலந்தாய்வின்போது செல்போன் எடுத்துச் செல்லத் தடை கிடையாது. எனினும் வளாகத்தில் செல்போனை பயன்படுத்த கூடாது.

கட்ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாணவராக அழைக்கப்படுவார்கள். ஆன்லைன் மூலம் நமக்கு தேவையான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை ஒரு கணினிப் பணியாளர் உதவியுடன் நாம் தேர்வு செய்யலாம். கலந்தாய்வுக்கு இடையில் செல்போன் மூலம் வேறு நபர்களிடம் ஆலோசனை கேட்க அனுமதியில்லை.

எவ்வித பதட்டமும் இன்றி ஏற்கனவே முடிவு செய்து வைத்திருக்கும் கல்லூரியை மாணவர் தெரிவு செய்துகொள்ளலாம். இதற்கென குறிப்பிட்ட நேர வரையறை எதுவும் கிடையாது இருப்பினும் அதிக நேரம் எடுத்து கொள்ளாமல் முதலில் 3 கல்லூரிகளை தேர்வு செய்து பின்னர் அவற்றில் மூன்றில் ஒன்றை சில நிமிடங்கள் யோசித்து தேர்வு செய்யுங்கள் ஒருமுறை கணினி மூலம் கல்லூரியை தேர்வு செய்துவிட்டால் பின்னர் மாற்ற இயலாது. எனவே கல்லூரி மற்றும் பாடப்பிரிவை உறுதியான முடிவுடன் தேர்வு செய்துவிட்டு உங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

English Summary : First Students should prepare themselves and follow some instructions before attending BE counseling.