மெளன குரு, டிமாண்ட்டி காலனி ஆகிய படங்களில் நடித்த நடிகர் அருள்நிதியின் அடுத்த படமான ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
எம்.எஸ்.கே. பிலிம் நிறுவனர் நாகராஜ் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, “லியோ விஷன் நிறுவனத்தின் உரிமையாளரான ராஜ்குமார் தயாரிக்கும் ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ படத்தின் வெளிநாட்டு உரிமையை என்னுடைய நிறுவனமான எம்.எஸ்.கே.பிலிம் கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் முன்பணம் கொடுத்து ஜூன் 9ம் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் படம் வெளியாவதற்கு 3 நாட்கள் முன்னர் மீதித்தொகையை வழங்க வேண்டும் என்று இருக்கும் நிலையில், படத்தின் தயாரிப்பாளரை பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. என்னிடம் முன்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்காமல் உள்ளனர். எனவே, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி தீர்ப்பை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். நாளை வெளியாகும் தீர்ப்பை அடுத்துதான் இந்த படத்தின் ரிலீஸ் உறுதி செய்யப்படும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது
English Summary:Sudden trouble with the new film arulnidhi