கோடை விடுமுறை காலமாகிய கடந்த மே, ஜூன் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் ரயில் பயணிகளின் வசதியை முன்னிட்டு தெற்கு ரயில்வே முன்பதிவில்லா 388 சிறப்பு ரயில்களை இயக்கி சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து நேற்று வெளியான செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:
கடந்த கோடைக்கால விடுமுறையில் பொதுமக்கள் குடும்பத்துடன் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணங்கள் செய்ததால் தினசரி ரயில்களில் அதிகப்படியான காத்திருப்பு பட்டியல் இருந்தது. அதை குறைக்கும் வகையில், எந்தெந்த வழித்தடங்களில் காத்திருப்பு பட்டியல் அதிகமிருந்ததோ அந்தந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் மெயில், விரைவு ரயில்களில் கூடுதலாக 1,593 பெட்டிகள் தாற்காலிகமாக இயக்கப்பட்டன. 60 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டன. இதனிடையே, ஐ.ஆர்.சி.டி.சி. பயணிகளின் வசதிக்காக 19 சுற்றுலா ரயிலையும் இயக்கியது.
சென்னை புறநகர் ரயில்களில் காகிதமில்லா பயணச் சீட்டுகள் செல்லிடப்பேசியின் மூலமாக எடுக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல்கட்டமாக தொடங்கப்பட்ட இந்தச் சேவையில் நாள் ஒன்றுக்கு 400 பேர் காகிதமில்லா பயணச்சீட்டை எடுக்க தொடங்கியுள்ளனர். அதேபோல, 55 தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட கோட்டங்களில் நிறுவப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக மன்னார்குடி, காரைக்கால் ரயில் நிலையங்களில் புதிதாக கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மதுரை ரயில் நிலையத்தில் பிரம்மாண்டமான எல்ஈடி வசதிக் கொண்ட ரயில்வே அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
கோவை – மேட்டுப்பாளையம் இடையிலான பாதை மின்மயமாக்கப்பட்டு, பயணிகள் ரயிலின் சேவையும் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தானியங்கி ஒலிப்பெருக்கி, மின்னனு அறிவிப்பு பலகைகள் ஆகியவை ஏப்ரல் மாத்ததில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. அதேபோல 81 புறநகர் ரயில்களில், ரயில் பாதுகாப்பு எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டுள்ளது. ரயில் ஓட்டுநர் கவனக் குறைவாக சிக்னலை மீறிச் செல்லும்போது, தானாக ரயிலை எச்சரித்து நிறுத்தக் கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
விருதுநகர் – தூத்துக்குடி – திருநெல்வேலி இடையே மின்மயமாக்கும் பணி நிறைவடைந்தது. இதன் காரணமாக, சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி வழி விழுப்புரம் திருச்சி, மதுரை இடையிலான மொத்த வழித்தடமும் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
English Summary:The achievement of the Southern Railway in the summer holidays