சென்னை நகரில் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு சேவை செய்து வரும் நிலையில் சென்னையின் இரண்டு அஞ்சலகங்களுக்கு ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது என்ற பெருமைக்குரிய செய்தி தற்போது வெளிவந்துள்ளது. சென்னை பொது அஞ்சலகம் (ஜி.பி.ஓ.) மற்றும் தி.நகரில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் ஆகிய இரண்டு அஞ்சலகங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் கிடைத்துள்ளதாக அஞ்சல் துறை பெருமையுடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியதாவது: சென்னை பொது அஞ்சலகம், தியாகராய நகர் தலைமை அஞ்சல் நிலையம் ஆகிய இரண்டுக்கும் ஐ.எஸ்.ஓ, தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்திய தர நிர்ணய அமைப்பால் வழங்கப்பட்ட இந்தத் தரச் சான்றிதழ் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

சிறந்த சேவை, தரம், நிர்வாகம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அண்ணா சாலை, மயிலாப்பூரில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம், திருச்சி ஆர்.எஸ்.புரத்திலுள்ள தலைமை அஞ்சல் நிலையம், பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் ஆகிய ஐந்து அஞ்சல் நிலையங்களுக்கும் ஐ.எஸ்.ஓ, தரச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாகம் என்ற நிலையில் இருந்து, சேவை நோக்கத்தை அடையும் குறிக்கோளோடு, நாடு முழுவதும் சேவோட்டம் என்னும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், இந்த ஏழு அஞ்சல் நிலையங்களுக்கும் ஐ.எஸ்.ஓ, தரச் சான்றிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வாறு மெரிவின் அலெக்ஸாடரின்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : ISO certification was issued to Chennai General Post Office and Chief Postal station in T.Nagar .