kindergardenசென்னையில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் புதியதாக 100 மழலையர் வகுப்புகள் தொடங்குவதற்கான தீர்மானம் ஒன்று நேற்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம் பின்வருமாறு:

சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் (2014- 2015) சென்னை மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதலில் 25 மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தற்போது மொத்தம் 65 மழலையர் வகுப்புகள் இயங்கி வருகின்றன. 2014-15 ஆண்டில் மாநகராட்சி மழலையர் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி. மாணவர்களின் எண்ணிக்கை 5,422 ஆகும். இது முந்தைய கல்வியாண்டைவிட 2,500 அதிகம். மாணவர் சேர்க்கை அதிகரிப்பதால் 110 பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்க உத்தேசிக்கப்பட்டு, சேர்க்கை தொடங்கப்பட்டது. இதில் 10 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. அதனால் அந்தப் பள்ளிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

2015-16 கல்வியாண்டில் புதிதாக 100 மழலையர் வகுப்புகள் தொடங்கப்படும். மேலும் ஏற்கெனவே உள்ள 65 பள்ளிகளில் வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் புதிய பள்ளிகளுக்கும் வழங்கப்படும் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி சார்பில் ஆயிரம் விளக்கு மாதிரிப் பள்ளி சாலையில் தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக சிறப்புப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் உள்ள ஓர் அறையை, தசைத்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி மையம் நடத்தும் நிறுவனத்துக்கு ஓராண்டுக்கு இலவசமாக வழங்க மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிப் பள்ளிகள், மழலையர் பள்ளிகளுக்குத் தேவைப்படும் வசதிகள், பள்ளிசார் பணிகளில் ஏற்படும் தேவைகளை அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியரே மேற்கொள்ளவும், அதற்கான நிதியை கல்வி அலுவலர் மூலம் நேரடியாக வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

English Summary:More 100 kindergardens classes starts in Chennai corporation schools.