ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களிக்க வேண்டும் என்று அனைத்து அரசியல் மற்றும் சமூக நல தலைவர்களும் வற்புறுத்தி வரும் நிலையில் பொதுமக்களுக்கு வாக்களிக்கக்கூடிய முக்கியத்துவத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இணையவழி போட்டிகளை ஏற்கனவே நடத்தி வரும் தேர்தல் ஆணையம் தற்போது மீண்டும் அந்த போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. ‘தேர்தலில் வாக்களிப்பது கடமை’ என்ற தலைப்பில் பல பிரிவுகளில் இந்த போட்டி இணையத்தின் வழியாக நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, “வாக்களிப்பது தொடர்பாக, வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இணையதளம் வழியாக பல்வேறு போட்டிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. இப்போது, 4-வது இணையவழிப் போட்டியை நடத்தவுள்ளது.

பாதுகாப்புப் படையினரையும், பணியில் இருப்போரையும் வாக்களிக்கச் செய்வோம் என்ற தலைப்பு இப்போதைய இணையவழிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பைப் பிரதிபலிக்கும் வகையில், கட்டுரை, குறும்படம், போஸ்டர் போன்றவற்றைத் தயாரிப்பது அனுப்பலாம். வாக்காளர்கள் தங்களது படைப்புகளை www.eci.nic.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாக, வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஆர்வமுள்ள வாக்காளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்று, தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு வலுசேர்க்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இணையதளம் வழியாக ஏற்கனவே நடத்தப்பட்ட முதல் இரண்டு போட்டிகளுக்கான முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. “தேர்தலில் இளைஞர்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட முதலாவது போட்டியில் மதுரையைச் சேர்ந்த எஸ்.வி.அருண் பிரசாத் (வாசகம் எழுதும் போட்டி), கோவையைச் சேர்ந்த ஜபீர் கான் (குறும்படம் போட்டி) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

“தேர்தலில் பெண்களின் பங்கு’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட 2-ஆவது போட்டியில் போஸ்டர் தயாரிக்கும் பிரிவில் சென்னையைச் சேர்ந்த சக்தி ராஜாஜியும், குறும்படம் தயாரிப்பில் ஜபீர் கானும் வெற்றி பெற்றனர். இவ்வாறு சந்தீப் சக்சேனா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

English Summary : Election Commission in India has conducted a competition on Role of Youth in Elections and the winners list was updated in their website.