modiபாரத பிரதமர் நரேந்திர மோடி வரும் 7ஆம் தேதி சென்னைக்கு வரவுள்ளதால் பாதுகாப்பு காரணங்களை கருதி சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் பணிகள் நாளை மறுநாள் நிறுத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் கைத்தறி நெசவாளர்கள் தொடர்பான நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளார். காலை 10 மணிக்கு மேல் சுமார் 90 நிமிடங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதமர் வருகையின் காரணமாக பாதுகாப்பு குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆலோசனையின்படி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் தலைமையில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு கூட்டம் தொடங்கி சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, டி.ஜி.பி. அசோக்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நுண்ணறிவு பிரிவு ஐ.ஜி. டேவிட்சன் ஆசீர்வாதம், சென்னை மாநகராட்சி கமிஷனர் விக்ரம் கபூர், சென்னையில் உள்ள முப்படை அதிகாரிகள், மத்திய உளவுத்துறை அதிகாரி, ஏர் இந்தியா நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை ஐ.ஜி. சவுத்திரி, டி.ஐ.ஜி. யாதவ், சூப்பிரண்டுகள் பாண்டே அரிஷ், ஸ்ரீ, மானிக் ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தனர். மேலும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை துணை சூப்பிரண்டுகள், இன்ஸ் பெக்டர்கள் மொத்தம் 20 பேரும் சென்னை வந்துள்ளனர். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம் வரை சாலை மற்றும் சுற்றுப்பகுதிகளை சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். பின்னர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் விமான நிலைய ஆணையக அதிகாரிகள், விமான நிலைய பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்படையினர் மற்றும் தென்சென்னை போலீஸ் இணை கமிஷனர் அருண், பரங்கிமலை துணை கமிஷனர் அவினாஷ்குமார், விமான நிலைய உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார், முக்கிய பிரமுகர்கள், பாதுகாப்பு பிரிவு போலீசார், மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின்படி விமான நிலையத்தில் தற்போதுள்ள 3 அடுக்கு பாதுகாப்பை 5 அடுக்கு பாதுகாப்பாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. விமான நிலையம், பழைய விமான நிலையம், சரக்கக பிரிவு ஆகிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது, மோப்ப நாய் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபடுவது, துப்பாக்கி ஏந்திய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

விமான நிலைய நுழைவு பகுதியில் பலத்த சோதனைக்குப்பின் பயணிகளை அனுமதிப்பது, வாகனங்கள் சோதனையை கடுமையாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் வரை மெட்ரோ ரெயில் பணிகள் நாளை மறுநாள் நிறுத்திவைக்கப்படுகிறது. விமான நிலையம் பகுதியில் தற்போது 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர். பிரதமர் வரும்போது போலீசாரின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்தவும் தீர்மானிக்கப்பட்டது.

பிரதமர் மோடி நாளை மறுநாள் காலை 8.30 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார். பகல் 11 மணிக்கு பழைய விமான நிலையத்திற்கு வந்து சேருகிறார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் குண்டு துளைக்காத காரில், பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்திற்கு செல்கிறார். அங்கு விழாவில் கலந்து கொண்டபின் மதியம் 2 மணிக்கு பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு பிரதமருக்கு வழியனுப்பு விழா நடக்கிறது. அதன் பின்னர் தனி விமானத்தில் பிரதமர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

English Summary:Modi visit echo.Metro rail work stopped.