collector_sundravalliதற்போது கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான மென்பொருள்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் சேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வகையான மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்க மாணவர்கள் கண்டுபிடித்த சிறந்த கணினி மென்பொருட்களுக்கு முதல்வர் விருது மற்றும் பரிசுத்தொகையும் வழங்கப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார். இதற்காக மாணவர்கள் வரும் செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் அறிவிப்பு செய்துள்ளார்.

இதுகுறித்து சென்னை ஆட்சியர் எ.சுந்தரவல்லி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: செல்லிடப்பேசியின் புதிய பயன்பாடுகள்-ஜிஐஎஸ் தொழில்நுட்பம், பொது சுகாதாரம்- பள்ளிக் கல்வி, மாற்றுத்திறனாளிகள், இதர சமூகப் பிரிவு உள்ளிட்ட துறைகளில் சிறந்த, பயனுள்ள மென்பொருள் படைப்புகள் விருதுக்கு கோரப்பட்டுள்ளன.

தகுதி: சிறந்த கணினி படைப்புகளை அனுப்புவதற்கு அரசு, அரசு உதவிபெறும் தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் முழுநேர பட்டயம், பட்டம், முதுநிலை, முனைவர் பிரிவுகளில் பயின்றுவரும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மாவட்ட அளவிலான விருது: சென்னை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 சிறந்த மென்பொருள் படைப்புகளுக்கு முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ. 7,500, மூன்றாம் பரிசு ரூ.5,000 என வழங்கப்படும்.  இந்த மூன்று பரிசுகளில் முதல் பரிசு பெறுவோர் மாநில அளவில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.

மாநில விருது: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மென்பொருள் படைப்புகளில் முதல் மூன்று படைப்புகளுக்கு முதலமைச்சர் விருதும், பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதில், முதல் பரிசு பெறும் திட்டத்திற்கு ரூ.2,50,000-ம், இரண்டாம் பரிசு ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1,50,000 என வழங்கப்படும். மேலும், பரிசுத் தொகையோடு அணியில் உள்ள அனைவருக்கும் கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதன்படி, ஒவ்வொரு கல்லூரியும், புதிய மென்பொருள் தயாரிப்பதற்கு குறிப்பிட்ட பிரிவில் 4 முதல் 8 பேர் கொண்ட குழுவை அமைத்துக் கொள்ளலாம்.
மேலும், கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளைக் கல்லூரி முதல்வரிடம் அனுமதி பெற்று, “கணினி மென்பொருள்களுக்கான முதலமைச்சர் விருது’ என்று குறிப்பிட்டு செப்டம்பர் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான, விண்ணப்பத்தை www.chennai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு சென்னை ஆட்சியர் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary:Principal’s Award for the best computer software. Chennai collector’s major announcement