chennaicorporationசென்னையில் கனமழை பெய்யும் காலங்களில் மழைநீர் சாலையெங்கிலும் தேங்கி பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாதாள சாக்கடையில் ஏற்பட்டிருக்கும் அடைப்புதான் காரணம் என கூறப்படுகிறது. இந்த பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை ப்புரவு தொழிலாளர்கள் மூலம் சரி செய்யும்போது சிலசமயம் விஷவாயுக்களால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

எனவே இதுகுறித்து  “மாற்றம் இந்தியா” என்ற அமைப்பின் இயக்குநர் நாராயணன் என்பவர்  சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு ஒன்ரை தாக்கல் செய்தார். அந்த மனுவில் பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகள் மனிதர்களை கொண்டு அகற்றப்பட்டு வருவதால் இதுவரை விஷவாயு தாக்கி 150 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மேலும், சாக்கடை அடைப்புகளை சரி செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்..

இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி எஸ்.கே கெளல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் நடத்தினர். அப்போது, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், பாதாளச் சாக்கடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றுவதற்கு 10 நவீன இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான டெண்டர் நடவடிக்கை முடிந்து விட்டது. தற்போது டில்லியில் இருந்து ஒரு இயந்திரம் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் அடைப்புகளைச் சரி செய்து வருகிறோம்.

மேலும், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 4,739 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் உள்ளது கண்டறியப்பட்டது என கூறியிருந்தோம். அதில், 4,353 இணைப்புகளை ஏற்கெனவே துண்டித்து விட்டோம். தற்போது மேற்கொண்ட ஆய்வில், மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில், மேலும் 3,290 சட்டவிரோத இணைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத இணைப்புகளையும் துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

English Summay:Ten Modern machines to remove the sewer blockage. Chennai Corporation Information.