வெளியூர்களுக்கு பயணம் செய்யும் ரயில் பயணிகள் முன்கூட்டியே தங்கள் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு வரப்பிரசாதமாக விளங்கி வருவது தட்கல் ரயில் டிக்கெட் முறை மட்டுமே. இந்நிலையில் இந்த தட்கல் ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்ய அடையாள அட்டை தேவையில்லை என்றும் பயணத்தின் போது மட்டும் அடையாள அட்டையை டிக்கெட் பரிசோதகரிடம் காண்பித்தால் போதும் என்ற புதிய முறையை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான மென்பொருள் மாற்றும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை தட்கலில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது அடையாள அட்டை தொடர்பாக விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற முறை நடைமுறை இருந்து வருகிறது. அதில் ஏதேனும் தவறு நேர்ந்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பயணிகள் தங்கள் அடையாள அட்டையின் விபரங்களை கவனமாக மபதிவு செய்வார்கள். இந்நிலையில் பயணிகளுக்கு பெரிதும் கஷ்டமாக இருக்கும் இந்த நடைமுறையை மாற்ற ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் முடிவு செய்தது. இதற்கான உத்தரவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டது. இதற்காக கணினியில் மென்பொருள் மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவின்போது, அடையாள அட்டை பதிவு தேவையில்லை என ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. ரயில் பயணத்தின்போது அடையாள அட்டையை காண்பித்தாலே போதும்.

6 பேர் கொண்ட குழுவினர் பயணம் செய்தாலும், அந்த குழுவில் உள்ள ஒருவர் அடையாள அட்டையை வைத்திருந்தாலே போதுமானது. இதனால், பயணிகள் தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது நேரத்தை சேமிக்க முடியும். இதற்காக மென்பொருள் மாற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புதிய முறை செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறினார்

இது குறித்து டிஆர்டியு செயல் தலைவர் ஆர். இளங் கோவனிடம் கேட்டபோது, ‘‘இந்த புதிய முறையினால் பயணிகளுக்கு சில நன்மைகள் இருக்கின்றன. அதே நேரத்தில் உண்மையான பயணிகள் பாதிக்கப்படும் வகையில் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, ரயில்வே துறை இதை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

English Summary : From September 1, Identity card is not required to book Tatkal ticket.