தொலைத்தொடர்பு சேவைகளை பல ஆண்டுகளாக சீரிய முறையில் செய்து வரும் பி.எஸ்.என்.எல் நிறுவனம், ஒவ்வொரு முக்கிய தினங்களிலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் நாளை இந்தியாவின் 69வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் செல்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையத் திட்டங்களுக்கு (Data Plans) சிறப்புச் சலுகையை தமிழக தொலைபேசி வட்டம் நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்ட அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 69-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் செல்போன் வாடிக்கையாளர்கள் இணைய வசதியைப் பெற பயன்படுத்தும் திட்டங்களுக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதள டேட்டா ரூ.561-க்கு ரீசார்ஜ் செய்யும்போது, அவற்றுக்கான காலக்கெடு 60 நாள்களாக நீட்டிக்கப்படும். அதேபோல், ரூ.821, ரூ.1,011, ரூ.1,949 ஆகிய முகமதிப்பில் ரீசார்ஜ் செய்யும்போது, 90 நாள்கள் வரை இணையப் பயன்பாட்டைத் தங்கு தடையின்றி பெறமுடியும்.
மேலும் அதேபோல், ரூ.53, 78, 96, 198, 253, 451 ஆகிய முகமதிப்பில் இணைய வசதியைப் பெற ரீசார்ஜ் செய்தால், கூடுதலாக 10 சதவீதம் அளவுக்கு இணையப் பயன்பாட்டை (Data usage) பெறலாம். அதாவது, ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரையிலான நான்கு நாள்களுக்கு இணையப் பயன்பாடு கூடுதலாகக் கிடைக்கப் பெறும். இந்தச் சலுகை சென்னை தொலைபேசி வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

இந்த அறிய வாய்ப்பை செல்போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இந்த சிறப்புச் சலுகை குறித்து கூடுதல் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் tamilnadu.bsnl.co.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என்றும் அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English Summary : BSNL announces Independence Day special offers from August 14th to August 17th.