சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கன்னி தேவாலயத்தில் 43வது ஆண்டு திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன் பயஸ் தலைமை வகித்து 12 அடி நீளம், 8 அடி உயரம் கொண்ட புதிய வேளாங்கன்னி கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைக்கின்றார்.
முன்னதாக, இன்று மாலை 4.45 மணிக்கு புனித ஆரோக்கிய மாதா கொடி தேர் பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி, பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை வந்தடைகிறது. இன்று தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், சிறப்பு வழிபாடு மற்றும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன. அதன்படி, ஆக.30ம் தேதி உழைப்பாளர் விழா, திருச்சி மறை மாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் நடக்கிறது.
31ம் தேதி தேவ அழைத்தல் விழாவும், செப்டம்பர் 1ம் தேதி துறவரம் சபைகள் விழாவும், 2ம் தேதி ஆசிரியர்கள் விழாவும், 3ம் தேதி நலம் பெறும் விழாவும், 4ம் தேதி இளைஞர்கள் விழாவும், 5ம் தேதி பக்த சபைகள் விழா வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தர ராஜூ தலைமையில் நடைபெறுகிறது. 6ம் தேதி நற்கருணை திருவிழா, முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் நடைபெறுகிறது. 7ம் தேதி அன்னையின் ஆடம்பர தேர் பவனி, செங்கல்பட்டு மறை மாவட்ட ஆயர் நீதிநாதன் தலைமையில் நடைபெறுகிறது. நிறைவு நாளான 8ம் தேதி அன்னை மரியா பிறப்பு விழா மற்றும் ஆரோக்கிய அன்னையின் திருவிழா நடைபெறுகிறது. இதில், அன்னைக்கு முடிசூட்டு விழா மற்றும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை நன்றி திருப்பளியை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் விழா முடிகிறது.
இந்த திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கும் காலை, மாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பளி நடைபெறும். இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதியை முன்னிட்டு போக்குவரத்து துறை சார்பில், பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில், ஆயர்கள், பங்கு தந்தைகள், அருட் சகோதரிகள், பங்கு மக்கள், தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள உள்ளனர். பொதுமக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தகவலை திருத்தல அதிபர் மற்றும் பங்கு தந்தை பிரான்சிஸ் சேவியர் நேற்று பத்திரிைகயாளர் சந்திப்பில் தெரிவித்தார். நிர்வாக தந்தை அமல்ராஜ், உதவி பங்கு தந்தை இமானுவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
English Summary : Special buses has been deployed for Besant Nagar Church 43rd annual festival.