சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிக்காக தமிழக அரசு பலகோடி நிதி ஒதுக்கி பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் புதியதாக வைரஸ் ஆராய்ச்சிக்காக ரூ.3.84 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று சட்டப் பேரவையில் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சி சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது: “தமிழகத்தில் உள்ள 15 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு ரூ.1.50 கோடி செலவில் கூடுதல் ரத்த சுத்திகரிப்புக் கருவிகள் வழங்கப்படும். பச்சிளம் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவுகளுக்கு ரூ.3.63 கோடி செலவில் நவீன கருவிகள், செவித்திறன் குறைபாட்டினைக் கண்டறிய 20 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ. 20 லட்சம் செலவில் உள்செவி ஒலி அதிர்வு ஆய்வுக் கருவிகள் நிறுவப்படும். தேசிய செவித்திறன் குறைபாடு தடுப்பு, கட்டுப்படுத்துதல் திட்டம் கூடுதலாக 12 மாவட்டங்களுக்கு ரூ.140 கோடி செலவில் விரிவுபடுத்தப்படும்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு ரூ. 2 கோடி செலவில் தானியங்கி ரத்த அணுக்கள் பகுப்புக் கருவி வழங்கப்படும். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை இருதய சிகிச்சைப் பிரிவில் ரூ. 2.60 கோடியில் கூடுதலாக ஒரு “கேத் லேப்’ (இதய பரிசோதனைக் கூடம்) அமைக்கப்படும்.
சென்னை கிண்டி கிங் ஆராய்ச்சி மைய வளாகத்தில் ரூ. 3.84 கோடியில் மாநில அளவிலான வைரஸ் ஆராய்ச்சி, நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்படும். 108 ஆம்புலன்ஸ் சேவையில் பழைய வாகனங்களுக்கு பதிலாக ரூ. 7.84 கோடி செலவில் 56 புதிய வாகனங்கள் மாற்றப்படும். முக்கியப் பிரமுகர்களின் சாலைப் பயணத்தின்போது பாதுகாப்பு வாகனங்களுடன் செல்லத்தக்க வகையில் ரூ. 80 லட்சம் செலவில் நான்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும்.
English Summary : Rs 3.84 crores has been allotted for Virus research in King Research Institute Guindy.