பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர தமிழக அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வுக்கான அனுமதியை தமிழக அரசு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு கடந்த ஏப்ரல் மாதமே வழங்கியுள்ள நிலையில் இன்னும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படாததால் முதுகலைப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பணிபுரிய வேண்டுமானால் தேசிய அளவில் நடைபெறும் ‘நெட்’ தகுதித் தேர்வு அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு ஆகியவற்றில் ஒன்றில் கட்டாயம் தேர்வு பெற்றிருக்க வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி புரியலாம். ஆனால் அதேநேரத்தில் ‘ஸ்லெட்’ தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் தேர்வு எழுதிய மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும்.

இந்நிலையில் ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். அந்த வகையில், தமிழகத்தில்தை பொருத்த வரையில் ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது.

இந்த நிலையில், 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதமே வழங்கிவிட்டது. ஆனால், அனுமதி கிடைத்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நெட் தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் இருமுறை திட்டமிட்டபட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014 ஜூன் மாதம் வரையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)தான் நெட் தேர்வினை நடத்தி வந்தது. 2014 டிசம்பர் முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நெட் தேர்வை நடத்தி வருகிறது. நெட் தேர்வினைப் போன்று ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும் என்பது தமிழக மாணவர்களின் விருப்பம். இனிமேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக ஸ்லெட் தேர்வுக் கான அறிவிப்பை வெளியிட்டு விரைவாக தேர்வை நடத்த வேண் டும் என்று முதுகலை பட்டதாரி களும், தற்போது இறுதி ஆண்டு முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து முதுகலை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், “நெட் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஸ்லெட் தேர்வு, மாநில அளவிலான தேர்வு என்பதால் அதில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு 2 ஆண்டுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அதன் பிறகு அத்தேர்வு நடத்தப்படவே இல்லை. நெட் தேர்வைப் போல ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.

English Summary : Post graduates are eagerly waiting for State level Slet exams date.