இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள ‘புலி’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ள நிலையில் விஜய் ரசிகர்களுக்கும், புலி’ படக்குழுவினர்களுக்கும் அதிர்ச்சி தரும் வகையில் தஞ்சையை சேர்ந்த அன்பு ராஜசேகர் என்பவர் ‘புலி’ படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தஞ்சை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பகுதியை சேர்ந்த அன்புராஜசேகர் என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையை தழுவித்தான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம் உருவாக்கப்பட்டதாகவும், இதற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட படக்குழுவினர் தனக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும் கடந்த 2014ஆம் ஆண்டு வழக்கு ஒன்றை தஞ்சை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை பல கட்டங்களுக்கு பின்னர் மீண்டும் வரும் அக்டோபர் 26ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் அன்புசேகர் புதிய மனு ஒன்றை தற்போது தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “கத்தி பட விவகாரம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நடிகர் விஜய் நடித்து வெளிவரவுள்ள புலி படத்திற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் விஜய், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. திங்களன்று நடைபெறும் விசாரணையில்தான் ‘புலி’ படத்திற்கு தடை விதிக்கப்படுமா? அல்லது மனு தள்ளுபடி செய்யப்படுமா? என்பது தெரியும்

உலகம் முழுவதும் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘புலி’ திரைப்படம், இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு திட்டமிட்டபடி ரிலீஸாகும் என அனைவராலும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

English Summary : Chances for Vijay’s “Puli” film to get banned due to “Kathi” incident.