தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் அக்டோபர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட உள்ளன. இந்நிலையில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமாரும், அவரது அணியில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஜயகுமாரும், செயலாளர் பதவிக்கு ராதாரவியும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இந்நிலையில் இவர்களுக்கு எதிராக பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் மற்றும் பொருளாளர் பதவிக்கு கார்த்தி, செயலாளர் பதவிக்கு விஷால் ஆகியோர் மனுதாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு சரத்குமார் அணியில் போட்டியிடும் விஜயகுமார், நடிகர் தியாகு, நடிகர் கே.ராஜன் உட்பட ஏராளமான நடிகர்கள் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சிவாஜி கணேசனின் 87-வது பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவரது சிலைக்கும் மாலை அணிவித்தனர்.
அதேபோல் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் நாசர் தலைமையிலான அணியினர் மனுதாக்கல் செய்வதற்கு முன் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் கலைவாணர் என்.எஸ்.கே மற்றும் காந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்.
மேலும் நேற்று மாலை 3 மணியளவில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாலை நாசர் தலைமையிலான அணியினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். முன்னதாக தேர்தல் அறிக்கையை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இந்த கூட்டத்தில் சத்யராஜ், பாக்யராஜ், ஆர்யா, சித்தார்த், வடிவேலு, சரண்யா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே விஷால் அணியினர் நேற்று முன் தினம் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு திரட்டினர். அப்போது அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் உறுதியளித்தார்.
English Summary : Sarath Kumar – Vishal teams nominated for Actors association election.