postஒருங்கிணைந்த வங்கிச் சேவை என்று கூறப்படும் கோர் பேங்கிங் வசதிக்கு இதுவரை சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் உள்ள 326 அஞ்சலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய அஞ்சல் துறையின் சென்னை மண்டல அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சலகங்களும் தற்போது கணினி மயமாக்கப்பட்டு, ஒருங்கிணைந்த வங்கிச் சேவைக்கு மாற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வசதியை ஏற்படுத்துவதற்காக “எங்கேயும், எப்போதும்’ என்னும் பெயரில் மத்திய அரசு ஒரு  திட்டத்தை அறிமுகம் செய்து, அதற்காக ரூ.800 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி நாட்டின் முதல் கோர் பேங்கிங் அஞ்சல் நிலையமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அஞ்சல் நிலையம் மாற்றப்பட்டது.  இவ்வாறாக தமிழகத்தில் 1,000 அஞ்சலகங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எங்கிருந்தும் பணப் பரிமாற்றம், பணம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற முடியும்.

இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:  சென்னை மண்டலத்தில் அண்ணா சாலை, அரக்கோணம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம், திருவண்ணாமலை, வேலூர், சென்னை வடக்கு, தெற்கு உள்ளிட்ட 12 கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கீழுள்ள 572 அஞ்சலகங்களில் செப்டம்பர் 28 வரை 326 அஞ்சலகங்கள் “கோர் பேங்கிங்’ வசதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 246 அஞ்சலகங்களிலும் மாற்றம் செய்யும் பணி விரைவில் முடிவடையும். பின்னர், தமிழகத்தில் எங்கிருந்தும் அனைத்து விவரங்களையும் எளிதில் பெற முடியும் என்று கூறினார்

English Summary:326 Post Office Tranformation to the Core Banking.