சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படத்தின் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 19ஆம் தேதி முதல் மலேசியாவில் நடைபெறவுள்ளது. அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய 2 படங்களை இயக்கிய இயக்குனர் ரஞ்சித், இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ‘கபாலி’ படம் குறித்தும் இந்த படத்தில் நடிக்கும் ரஜினியின் கேரக்டர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தோன்றிய இயக்குனர்களில் மிக முக்கியமானவர் மகேந்திரன். இவர் இயக்கிய ‘முள்ளும் மலரும்’ திரைப்படத்தில் ரஜினியின் கேரக்டரான காளி முற்றிலும் வித்தியாசமானது. இந்த படத்தில் அவர் ரஜினியை ‘காளி’ என்ற கேரக்டரில் கோபக்காரராகவும், பாசக்காரராகவும் படைத்திருப்பார் என்று கூறிய ரஞ்சித், அந்த காளி கேரக்டர்தான் இந்த ‘கபாலி’யின் இன்ஸ்பிரஷன் என்றும் கூறினார்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு எந்த பஞ்ச் டயலாக்குகள் எதுவும் இல்லை என்றும் கதைப்படி இந்த படத்திற்கு பஞ்ச் டயலாக் தேவையில்லை என்று நாங்கள் முடிவு செய்ததாக கூறிய ரஞ்சித், இந்த படத்தின் டைட்டிலான ‘கபாலி’யே ஒரு பஞ்ச் டயலாக்தான் என்றும் கூறினார்.
மேலும் ரஜினி இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு மிக முக்கிய காரணம், அவருடைய உண்மையான வயதில், நிஜ கெட்டப்பில் அதிக மேக்கப் இல்லாமல் இந்த கேரக்டர் இருப்பதுதான் என்று கூறிய ரஞ்சித் பாட்ஷாவுக்கு அடுத்து ரஜினிக்கு பெரும் புகழை இந்த படம் தேடித்தரும் என்று கூறியுள்ளார். ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, ‘மெட்ராஸ்’ கலையரசன், ‘அட்டக்கத்தி’ தினேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த திரைப்படம், வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.
English Summary : Director Ranjith made an announcement that no punch dialogue in “Kabali”.