இளையதளபதி விஜய் நடித்த ‘புலி’ திரைப்படம் கடந்த 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வந்தபோதிலும், சூப்பர் ஸ்டார் ரஜினி உள்பட பல திரையுலக பிரபலங்கள் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதால் திரையரங்குகளில் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
போலீஸ் திரைக்கதையுடன் அமைந்த இந்த படத்தில் விஜய்-சமந்தாவின் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் மூன்றாவது பாடலுக்காக படக்குழுவினர் விரைவில் வெளிநாடு செல்லவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்துவிட்டதாகவும், ஒருசில வசனக்காட்சிகள் மற்றும் இரண்டு பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மற்றொரு நாயகியான எமிஜாக்சன் அடுத்த வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் மிகவும் சீரியஸான படம் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காமெடிக்கும் அதிக முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் காமெடி கேரக்டர்களில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் மற்றும் ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர்கள் இருக்கும் நிலையில் தற்போது சந்தானமும் இந்த படத்தில் இணைந்து கொண்டதாகவும், இதனால் இந்த படத்தில் காமெடி காட்சிகள் சிறப்பாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், கே.எஸ்.ரவிகுமார், ராதிகா சரத்குமார், இயக்குனர் மகேந்திரன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.
English Summary: Vijay’s next film with Atlee must be comedy entertainer. Comedian Santhanam also takes part in Vijay’s 59.