சென்னை போன்ற பெருநகரங்களில் தோட்டம் போட்டு காய்கறி விளைவிக்கும் அளவுக்கு இடம் இல்லாததால், மொட்டை மாடி விவசாயம் ஒருசில இடங்களில் நடந்து வருகிறது. இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நிலையில் மண்ணின்றி வெறும் நீரை மட்டுமே கொண்டு காய்கறிகளை விளைய வைக்க முடியும் என தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது. சென்னை கொட்டிவாக்கத்தில், ‘பியூச்சர் பார்ம்ஸ்’ என்ற நிறுவனத்தை ஸ்ரீராம் கோபால் என்பவர் உருவாக்கி, நீர்வழி விவசாயம் எனப்படும் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ விவசாயம் செய்து வருகிறார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: நான், ஒரு பொறியாளர். ஒரு தனியார் நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருந்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன், ‘யூ டியூப்’பில், ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ என்ற, வீடியோவை பார்த்தேன். அந்த வீடியோவில், குறைந்த இடப்பரப்பில், மண்ணின்றி, அடுக்கடுக்கான முறையில், காய்கறிகள் பயிரிடப்பட்டது, என்னை வெகுவாக கவர்ந்தது. என் தந்தையிடம் அனுமதி வாங்கி, பல்வேறு வீடியோக்கள், இணையதளங்கள் மூலம் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறை பற்றி அறிந்து, செயலில் இறங்கினேன். குளிர்பிரதேசங்களில் செய்யப்படும் ‘ஹைட்ரோபோனிக்ஸ்’ முறையில், சென்னையில் விவசாயம் செய்தது சரியாக வரவில்லை. அதற்காக பல்வேறு வழிமுறைகளில் பரிசோதித்து தான், வெற்றி பெற முடிந்தது.
இந்த முறைக்கு, பி.வி.சி., குழாய்கள், பிளாஸ்டிக் வாளிகள், ஆயிரம் டிகிரி பாரன்ஹீட்டில் கட்டிப்படுத்தப்பட்ட, எடை குறைந்த களிமண் உருண்டைகள், நுண்ணுாட்டக் கரைசல், பயிர் பராமரிப்புக்கான கருவிகள், நீர் உந்தும் மோட்டார் உள்ளிட்டவை தேவைப்படுகின்றன. குறைவாக வேர்களை கொண்டு உள்ள குறுகிய கால பயிர்களான கீரைகள் உள்ளிட்டவற்றிற்கு, பி.வி.சி., குழாய் முறையிலும், ஆண்டு முழுவதும் வளரும் தாவரங்களுக்கு, வாளி முறையிலும், விவசாயம் செய்யலாம். குழாய் முறை விவசாயத்தில், உயர்தரமான பி.வி.சி., குழாய்களில் அருகருகே, வட்ட வடிவ ஓட்டைகள் இடப்பட்டு, அவற்றில் களிமண் உருண்டைகள் நிரப்பிய, சிறிய சல்லடை வடிவ வாளிகள் இடப்படுகின்றன. அவற்றில் விதைகள் இடப்படுகின்றன.
குழாய்களில், நுண்ணுாட்டக் கரைசல், மோட்டாரால் பம்ப் செய்யப்பட்டு, சுழற்சி முறையில், குறைந்த வேகத்தில் செல்கிறது. ஆண்டு தாவர இலைகளின் ஈரத்தன்மை பாதிக்கப்படாமல் இருக்க, சொட்டு நீர் பாசன முறையில், நீர் தெளிக்கப்படுகிறது. வாளி முறை விவசாயத்தில், வாளியின் மையப்பகுதில் வட்ட வடிவ ஓட்டை இடப்பட்டு, அதில், சற்றே பெரிய சல்லடை வாளி வைக்கப்படுகிறது. அதில், நிரப்பப்பட்டுள்ள களிமண் உருண்டைக்கு இடையே செடி வைக்கப்படுகிறது. பயிர்களின் வேர், சல்லடை வாளிகளில் உள்ள ஓட்டைகள் வழியே, சுழற்சி முறையில் உள்ள நுண்ணுாட்டத்தை கவர்கின்றது. அதனால், மண்ணில் வளர்வதை விட, வேகமாகவும், செழிப்பாகவும் பயிர்கள் வளர்கின்றன. மிளகாய், தக்காளி, புதினா, கீரை வகைகள் உள்ளிட்டவற்றை இதில் பயிர் செய்ய முடியும்.
வியாபாரத்திற்கு பயன்படும்வியாபார யுக்தியில் பயன்படுத்துவோருக்கும், சொந்த தேவைக்காக பயன்படுத்துவோருக்கும் ஏற்ற முறைகளில் இதில், தனித்தனி தொழில்நுட்ப அமைப்புகள் உள்ளன. வீடுகளின் முற்றங்கள், மொட்டை மாடிகளில் இந்த விவசாயத்தின் மூலம், கொத்தமல்லி, புதினா உள்ளிட்ட வாசனை பயிர்களை வளர்ப்பதால், இடம் அழகு பெறுவதோடு, பயன்பாடும் அதிகரிக்கிறது. நிலம் வாங்கி விவசாயம் செய்வதை விட, ஒரே ஒருமுறை வாங்கப்படும், பி.வி.சி., குழாய் அமைப்பு, வாளி அமைப்பு, களிமண் உருண்டைகளை கொண்டு, ஒவ்வொரு ஆண்டும், நுண்ணுாட்டங்களையும், பயிரையும் மாற்றி விவசாயம் செய்து, லாபம் பார்க்க முடியும் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் 98404 32029 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
English Summary : Hydroponics agriculture in Chennai.