நடிகர் சங்க தேர்தல் வரும் 18ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி பத்மனாபன் அவர்கள் மேற்பார்வையில் நடைபெற உள்ள நிலையில் சரத்குமார் மற்றும் விஷால் அணியினர்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக செய்து வருகின்றனர். பாண்டவர் அணி என்று கூறப்படும் விஷால் அணியில் இருந்து 40 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று சொகுசு பேருந்து மூலம் தென் மாவட்டங்களில் உள்ள நாடக நடிகர்களிடம் பிரச்சாரம் செய்ய கிளம்பியுள்ளனர்.. இந்நிலையில் இந்த தேர்தலில் சரத்குமார் அணியில் சார்பில் துணைத்தலைவர் பதவிக்காக போட்டியிடும் நடிகர் சிம்பு, நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ஆவேசமாக விஷால் மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் கூறியதில் இருந்து சிலவற்றை தற்போது பார்ப்போம்

ஒற்றுமையாக இத்தனை ஆண்டுகாலம் இருந்த நடிகர் சங்கத்தை பிளவுபடுத்தியதே விஷால்தான். விஷால்தான் இந்த பிரிவிற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எதனால் உங்களை நீங்களே பாண்டவர் அணி என்று அழைத்துக்கொள்கிறீர்கள், இது என்ன போரா?

இந்த தேர்தலில் எனக்கு எதிராக போட்டியிடும் கருணாஸ் எனது சகோதரரை போன்றவர். விஷால்தான் ஒரே குடும்பமாக இருந்த எங்களை பிரித்துவிட்டார். குடும்பம் போன்று ஒற்றுமையாக இருந்த சங்கத்தை பிரித்த விஷாலுக்கு தலைமை பதவியை ஏற்கும் தகுதி இல்லை.

நட்சத்திர கிரிக்கெட் அணியை உருவாக்கியது நடிகர் அப்பாஸ்தான். ஆனால் அவரை வெளியேற்றிவிட்டு கிரிக்கெட் அணியை விஷால், தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொண்டதோடு அப்பாஸையும் வெளியேற்றிவிட்டார். நீங்கள் நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு மட்டும்தான் கேப்டன். கேப்டன் விஜய்காந்த் போல நடந்து கொள்ள வேண்டாம். அவரை போல உங்களால் மாற முடியாது.

ராதாரவி உங்களை நாய் என்று அழைத்ததாக கூறினீர்கள். அவர் நாய் என்று கூறியது தவறுதான். அவர் உங்களை நரி என்றுதான் அழைத்திருக்க வேண்டும். விஷால் ஒரு நரி. அவர் வலையில் யாரும் விழுந்துவிட வேண்டாம்

நடிகர் சங்கத்திற்காக நீங்கள் என்ன செய்துள்ளீர்கள். நடிகர் சங்கத்தின் சார்பில் சினிமா ஹால் கட்ட வேண்டாம் என கூறுகிறீர்கள். அப்படியென்றால் கிளப் அல்லது பப் கட்ட விரும்புகிறீர்களா?

கட்டடம் தொடர்பான ஒப்பந்தம் சரியானது தான். நான் யாரைப் பற்றியும் தவறாக பேச மாட்டேன். நான் எனது குடும்பத்திற்காக இங்கு பேச வந்துள்ளேன். இன்றைக்கு யாரோ வந்து என் சினிமா குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள்.

என் குடும்பத்தில் பிரிவினை உண்டாக்க நீ யார்? நடிகர் சங்கம் பக்கம் வராதவர்கள் எல்லாம் இன்று கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது. இந்த நடிகர் சங்கத்தை பார்த்து நாடே சிரிக்கிறது.

நல்லவர்கள் கையில் இந்த சங்கம் இருக்கம் வேண்டும். வருகிற 11ம் தேதி எங்களது அணியின் பலத்தை நாங்கள் நிரூபிப்போம். எல்லோரும் ஒன்று திரண்டு வாருங்கள். சங்க ஒற்றுமைக்காக தேர்தலில் இருந்து எங்கள் அணியினர் வாபஸ் பெற தயாராக இருக்கிறோம்.

16 வயதில் இருந்து நான் நடிகர் சங்க கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன். உண்மையின் பக்கம் இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம். எனக்கு பதவி ஆசை கிடையாது. பதவி எனக்கு தேவையில்லை.

சரத்குமார் மீது விஷாலுக்கு ‘பர்சனலாக’ பகை. அதை மனதில் வைத்து கொண்டு நடிகர் சங்க ஒற்றுமையை உடைக்க முயற்சிப்பதா? என் குடும்பத்தை பிரிப்பதா? உன் உள்நோக்கம் என்ன?

இவ்வாறு நடிகர் சிம்பு ஆவேசமாக கூறியுள்ளார்.

English Summary : Simbu told media that Vishal is like a fox and don’t fall into his trap.