சென்னை மாநகராட்சியின் வரவு செலவு திட்டங்களில் 93 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளதாக மேயர் சைதை துரைசாமி நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் கூறியதாவது:
அதிமுக ஆட்சியின் 4 ஆண்டு காலத்தில் வரவு செலவு திட்டங்களில் 93.55 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னையில் சுமார் 17 லட்சம் வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் கொசு தடுப்புப் பணிகளை மேற்கொள்ள 3,200 மலேரியா தொழிலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் வாரம் ஒருமுறை சென்று கொசு புழு வளரிடங்களான மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டி, கிணறு, தேவையற்ற பொருள்கள் ஆகியவற்றை கண்டறிந்து கொசு புழுக்கள் இருப்பின் அவற்றை அழித்து வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவரை 260 டன் உபயோகமற்ற பொருள்கள், 210 டன்கள் உபயோகமற்ற டயர்கள் அகற்றப்பட்டுள்ளன.
நீர்வழிப் பாதைகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.9.97 கோடியில் 5.89 லட்சம் கொசுவலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முயற்சிகளால் நோய்களின் தாக்கம் குறைந்துள்ளது. மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு பாதிப்புகளும் குறைந்துள்ளன. டெங்கு பாதிப்பு 2010-ம் ஆண்டில் 392 ஆக இருந்தது. இது, 2013-ல் 133, 2014-ல் 137, 2015 அக்டோபர் 26 வரை 93 என்ற அளவில் குறைந்துள்ளது.
மேலும் நச்சு செடியான வேலிகாத்தான் எனப்படும் சீமை கருவேல மரங்களை ஆளுக்கு ஒரு மரம் என்ற விகிதத்தில் சென்னை நகரிலிருந்து அகற்றிடுவோம்’ என்று மேயர் சைதை துரைச்சாமி கூறினார்.
மேலும் சென்னை மெரினா கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரையுள்ள உட்புற சாலை விரிவாக்கப் பணிகள் 60 சதவீதம் முடிந்துள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
English summary-Chennai Mayor Saidai S. Duraisamy informs of 93% of work completed.