counselling-29102015சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா- இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள இந்திய மருத்துவமுறை- ஹோமியோபதி ஆணையர் அலுவலக வளாகத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த கலந்தாய்வு நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாகவும், இந்த கலந்தாய்வின் முடிவில் சுயநிதிக் கல்லூரிகளில் 211 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் 356, சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 743 என மொத்தம் 1,099 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. முதல் மூன்று நாள்களில் அரசு இடங்கள் அனைத்தும் நிரம்பியதை அடுத்து சுயநிதிக் கல்லூரிகளில் அரசு இடங்களுக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்றது. நேற்றைய இறுதி நாளில் ஏற்கெனவே காலியாக இருந்த சுயநிதிக் கல்லூரிகளில் 79 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், மாணவர் சேர்க்கைக்கு புதிதாக அனுமதி கிடைத்த சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 132 அரசு இடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 211 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

இறுதி நாள் கலந்தாய்வில் பங்கேற்க 1,502 பேருக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இரவு வரை நீடித்த இந்த கலந்தாய்வின் முடிவில் அனைத்து இடங்களும் தற்போது நிரம்பிவிட்டது. கலந்தாய்வில் பங்கேற்று சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். மேலும் சேர்க்கைக் கடிதம் பெற்று மாணவர்கள் கல்லூரியில் சேராமல் காலியிடங்கள் ஏற்பட்டால் அவற்றுக்கான கலந்தாய்வு அக்டோபர் 31-இல் நடைபெறும் என்றும் இந்திய மருத்துவமுறை ஆணையர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
English summary-counselling for selection of candidates for Bachelor of Siddha course completed