தமிழக அரசால் கேளிக்கை வரிச்சலுகை பெற்ற படங்களுக்கும் திரையரங்குகளில் வரியுடன் பொதுமக்களிடம் வசூல் செய்யப்படுகிறது என்று தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி இனிமேல் தமிழக அரசு அளிக்கும் வரிச்சலுகை முழுவதும் பார்வையாளர்களையே போய்ச்சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி இனிமேல் சென்னை திரையரங்குகளில் ரூ.120 கட்டணம் ரூ.84ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.மகாதேவேன் பிறப்பித்த உத்தரவின் முழு விபரங்கள் பின்வருமாறு: தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்படும் திரைப்படத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. திரைப்படம் காண வரும் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு இரட்டை அர்த்த வசனங்கள், வன்முறை, கவர்ச்சி போன்றவை இல்லாத படங்களுக்கு இச்சலுகை வழங்கப்படுகிறது. இந்த வரி விலக்கு உரிமை அல்ல. இது ஒரு மானியம் ஆகும்.
கேளிக்கை வரிச் சலுகையின் பயன்கள், திரைப்படத் தொழிலுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும்தான் போய்ச் சேர வேண்டும் என்று அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது. அதனால், மனுதாரரிடம் கூடுதலாக வசூலித்த கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை (ரூ.107) திருப்பித் தர வேண்டும். மனுதாரரைப் போல மற்றவர்களிடமும் வசூலித்த பணத்தைத் திருப்பித் தர இயலாது.
எனவே, மற்றவர்களிடம் வசூலித்த கேளிக்கை வரி சலுகைக் கட்டணத்தை வணிக வரி மற்றும் பதிவுத் துறை, வணிக வரித் துறை அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர் செலுத்த வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணம் திரைப்படம் காண வரும் பார்வையாளர்களுக்குத்தான் போய்ச் சேர வேண்டும்.
எனவே, கேளிக்கை வரிச் சலுகை படம் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு போய்ச் சேருவதை உறுதி செய்யும் வகையில் இந்த உத்தரவு கிடைத்த 4 வாரத்துக்குள் உரிய உத்தரவுகளை அரசு பிறப்பிக்க வேண்டும். கேளிக்கை வரிச் சலுகைக் கட்டணத்தை பார்வையாளர்களிடம் வசூலித்த சம்பந்தப்பட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் வரிச் சலுகைக் கட்டணத்தை வசூலிக்கும் அனைத்து திரையரங்குகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரருக்கு திரையரங்க உரிமையாளர் ரூ.107 திருப்பித் தர வேண்டும்.
இவ்வாறு நீதிபதி ஆர்.மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.
English summary-Don’t pass entertainment tax on to viewers ,chennai high court