தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தென்மாவட்டங்கள் உள்பட வெளியூர்களுக்கு ஏராளமானோர் ஒரே நேரத்தில் செல்வதால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் மிக அதிகளவிலான கூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் ஒருசிலர் தனியார் வாகனங்களிலும், வாடகை டாக்சிகளிலும், சொந்த வாகனங்களிலும் ஊருக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். ஆனால் இவ்வாறு சொந்த வாகனங்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்கள் தாம்பரம் வழியாக ஜி.எஸ்.டி. சாலையில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வாகனங்களில் பயணிப்பார்கள். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக வாய்ப்பிருக்கிறது. எனவே இன்று முதல் தனியார் வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் தாம்பரம் பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து கீழ்கண்ட சாலைகள் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
ராஜீவ் காந்தி சாலை (பழைய மகாபலிபுரம் சாலை) வழியாக துரைப்பாக்கம், கேளம்பாக்கம், திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாக செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று அக்கரை, முட்டுக்காடு, கோவளம், மகாபலிபுரம் பைபாஸ், கருங்குழி, திருக்கழுக்குன்றம் பைபாஸ் வழியாகவும் செங்கல்பட்டு திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
பூந்தமல்லி சாலை வழியாக மதுரவாயல் சந்திப்பு, வேலப்பன் சாவடி, சவிதா பல் மருத்துவக்கல்லூரி, பூந்தமல்லி டெலிபோன் எக்சேன்ஞ் வழியாக நசரத் பேட்டை சென்று பூந்தமல்லி பைபாஸ் சாலையிலிருந்து புதிதாக போடப்பட்டுள்ள 400 அடி வெளிப்புறச்சாலை வழியாக நேராக வண்டலூர் அருகில் ஜி.எஸ்.டி சாலையை அடைந்து சென்னை-திருச்சி நெடுஞ்சாலையை சென்றடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சொந்த வாகனங்களில் செல்பவர்கள் மேற்கண்ட குறிப்புகளின்படி சென்றால் டிராபிக் இடையூறு இன்றி நிம்மதியாக ஊர்போய் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-Chennai police announced 3 New routes from chennai to southern districts.