சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மழை காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வு உள்பட பல தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை காரணமாக பிளஸ்-2 தேர்வுக்கு விண்ணப்பிக்க தனித் தேர்வர்களுக்கு நவம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று கூறுவதாவது:
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்-2 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 27-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், தனித் தேர்வர்கள் நலன் கருதி அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. எனவே, தனித் தேர்வர்கள் நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சேவை மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English summary-Plus two exam application due date extended