Ilayaraja-2111151000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து கின்னஸ் சாதனை புரிந்த இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு நூற்றாண்டு விருது வழங்கி கெளரவித்துள்ளது. கோவா தலைநகர் பனாஜியில் நேற்று கோலாகலமாக தொடங்கிய சர்வதேச திரைப்பட திருவிழாவில் இந்த விருதை இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி வழங்கினார்.

கோவாவில் நேற்று 46வது சர்வதேச திரைப்பட திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் சர்வதேச திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். விழாவின் முத்தாய்ப்பாக தமிழ் திரை இசையுலகில் கொடிக்கட்டி பறந்து வரும் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இளையராஜா விருது பெறும்போது அரங்கில் இருந்த ஒட்டுமொத்த திரைபிரபலங்களும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

விருதை பெற்ற பின்னர் இளையராஜா இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: ‘‘உலகம் முழுவதும் இன்று வன்முறை அதிகரித்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க அனைத்து பள்ளி, கல்லூரிகளில் இசையை கட்டாய பாடமாக்க வேண்டும். இசையால் வன்முறை எண்ணங்கள் எழுவதை தடுக்க முடியும்’’ என்று கூறினார்.

விழாவில் ரஷ்ய திரைப்பட தயாரிப்பாளர் நிகிதா மிக்கல்கோவ்வுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அனில்கபூர் பங்கேற்று, 1989-ம் ஆண்டு ஹிட்டாக ஓடிய ‘மை நேம் இஸ் லக்கான்’ திரைப்பட பாடலுக்கு நடனமாடி அரங்கை அதிரவைத்தார்.

இதே நூற்றாண்டு விருது கடந்த வருடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
english summary-Ilayaraja Receives Centenary Award