railways-231115ரயில்வே துறை அமைச்சகம் வரும் 2016-17 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளது. முதல்முறையாக ரயில்வே அமைச்சகம் பட்ஜெட் தாக்கல் செய்யும் முன், பொது மக்களின் ஆலோசனைகளைப் பெற தீர்மானித்துள்ளது. ரயில்வே பட்ஜெட்டுக்கு தேவையான ஆக்கபூர்வமான ஆலோசனைகளை பொதுமக்கள் இணையதளம் மூலம் ரயில்வே துறைக்கு வழங்கலாம் என்றும் இந்த ஆலோசனைகள் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதன்படி, அடுத்த ஆண்டு தாக்கல் செய்யும் ரயில்வே பட்ஜெட் குறித்த ஆலோசனைகளை இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களும் இந்திய ரயில்வே அமைச்சக இணையதளத்தில் இமெயில் மூலம் தெரிவிக்கலாம். அதற்கான பிரத்யேக இமெயில் முகவரி ரயில்வே அமைச்சக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில்வே பட்ஜெட் குறித்து ரயில்வே துறைக்கு ஆலோசனைகள் சொல்ல விரும்பும் பொதுமக்கள் http:www.indianrailways.gov.inrailwayboard என்ற இணையதள முகவரிக்குச் செல்ல வேண்டும். பின்பு, அதிலிருக்கும் Public Suggestions for forthcoming Railway Budget 2016 – 17 என்ற இணைப்பை “கிளிக்’ செய்ய வேண்டும். அதில், ஆலோசனை கூற விரும்புவோர் தங்களது பெயர், இ-மெயில் முகவரி, செல்போன் எண், முகவரி, ஆகியவற்றை பதிவு செய்து தங்களின் ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவிக்கலாம்.

இது குறித்து தெற்கு ரயில்வே மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘பயணிகளின் ரயில் பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்தப் பட்ஜெட்டின் பிரதான நோக்கமாக இருக்கும். அதன் அடிப்படையில் வருவாயைப் பெருக்க ரயில் பயண கட்டணமும், சரக்கு கட்டணமும் உயர்த்தப்படுமா அல்லது அதே கட்டணம் தொடருமா என்பதை ரயில்வே துறை ஆலோசிக்கும். எனவே, பயணிகள் பாதுகாப்பு குறித்த ஆலோசனைகள் மற்றும் தூய்மையான ரயில் பயணத்துக்கு தரப்படும் ஆலோசனைகள் ஆகியவற்றை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக்கொள்ளும். மேலும், பொது மக்களால் அனுப்பப்படும் கருத்து பயனுள்ளதாக இருந்தால் அதற்கான பதில் உடனடியாக அனுப்பப்படும்’ என்று கூறினார்

இந்த புதிய முயற்சி இனி ஒவ்வொரு ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டின்போதும் தொடரும் என்றும். எந்த மத்திய அரசும் செய்திராத புதிய முயற்சி இது என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English summary-Railways asks feedback from people for upcoming budget