schools-leave-231115
கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தமிழகத்தில் சென்னை உள்பட பல முக்கிய நகரங்களில் கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளத்தின் பாதிப்பு இன்னும் நீங்காத நிலையில் லட்சத்தீவு அருகே ஏற்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீண்டும் தமிழகத்தில் நேற்று மழை பெய்துள்ளது.

இந்த மழை காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையிலும், புறநகர்களிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கடலூர், நாகை, திருவாரூர் உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறையில் மிக அதிகமான அளவில் மழை பெய்து தெருக்களில் வெள்ளநீர் ஓடுகிறது. அங்கு 10 மணி நேரத்தில் 19 செமீ மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர். அதேபோல பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ் குமார் அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மக்கள் உஷாராக இருக்குமாறும், குறிப்பாக மணி முக்தா ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் எச்சரித்துள்ளார். அதேபோல யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும், அதற்கு உட்பட்ட காரைக்கால் மாவட்டத்திலும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கல்வி அமைச்சர் தியாகராஜன் உத்தரவிட்டுள்ளார்.
English summary-Schools and Colleges remain closed due to rain on 23rd Nov 2015