bsnl-29100215சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக பி.எஸ்.என்.எல் சேவையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதுகுறித்து புகார் அளிக்க சென்னை வாடிக்கையாளர்களுக்கு புதிய எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளர் (சென்னை தொலைபேசி) எஸ்.எம்.கலாவதி தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 10-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை சென்னையில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்ட போதும் வேளச்சேரி, மணலி, நங்கநல்லூர் உள்பட சில இடங்களில் உள்ள நிலையங்கள் மட்டும் ஓரிரு நாள்கள் சேவை வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள 284 நிலையங்களில் 95 சதவீத நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான சேவையை வழங்கின.

மின்சாரம், தீயணைப்பு, காவல்துறை, குழந்தைகள் பாதுகாப்பு, ஆட்சியர் அலுவலகம் உள்பட அவசர உதவிகளுக்கான அனைத்து எண்களையும் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் எந்தவித பிரச்னையும் இல்லாமல் தொடர்பு கொள்வதற்கு ஏற்ற வகையில் அந்த எண்களின் சேவை பாதிக்காதவாறு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன.

பலத்த மழையின்போது வேளச்சேரி, துரைப்பாக்கம் உள்பட சில நிலையங்களில் மின்சாரம் தடைபட்ட போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பு வைக்கப்பட்ட டீசல், பேட்டரிகள் மூலம் தடையில்லா சேவையை வழங்க முடிந்தது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் புகார் செய்ய 9445501500 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த எண் மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களது புகார்களை பதிவு செய்யலாம். கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இதைத் தொடர்ந்து புகார்கள் மீது குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 நாள்கள் வரை இந்த எண் நடைமுறையில் இருக்கும்.

தரைவழி இணைப்பு, செல்லிடப்பேசி சேவை, இணையதளம் போன்றவற்றில் எந்தக் குறைபாடு இருந்தாலும் அது தொடர்பான பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படும். இவ்வாறு எஸ்.எம்.கலாவதி கூறினார்.

மேலும் சென்னையில் உள்ள பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள் செல்லிடப்பேசி சேவை, தரைவழி இணைப்பு, இணையதளம் உள்ளிட்ட சேவைகளுக்கு அக்டோபர் மாதத்துக்கான கட்டணத்தைச் செலுத்துவதற்கு நவம்பர் 26-ஆம் தேதி காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பலத்த மழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் இந்த காலக்கெடு வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பி.எஸ்.என்.எல் தலைமைப் பொதுமேலாளர் கலாவதி தெரிவித்தார்.
English summary-