river-flood-251115சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக பூண்டி ஏரியின் முழு கொள்ளளவு நிரம்பியது. இதனால் இந்த ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 10,000 கன அடியில் இருந்து 12,500 கன அடியாக நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி, ஏரியில் குளிக்க பொதுப்பணி துறையினர் தடை விதித்துள்ளனர். தண்ணீர் திறந்துவிடப்படுவதைக் காண அங்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியில் தண்ணீர் அதிகளவு திறந்து விடப்பட்டதை அடுத்து ஏரியின் சுற்றுப்புற கிராமங்களான ஒதப்பை, மோவூர், மயிலாப்பூர், தேவந்தவாக்கம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவுறுத்தியுள்ளார். மேலும், பூண்டி ஏரி மற்றும் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், யாரும் ஏரியில் குளிக்க வேண்டாம் என வீரராகவ ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் சென்னையின் மற்றொரு பெரிய ஏரியான செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரித்ததால், அடையாற்றில் மீண்டும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நீரானது அனகாபுத்தூர், கெருகம்பாக்கம், மனப்பாக்கம், திருநீர்மலை, கவுல் பஜார், அடையாறு, சைதாப்பேட்டை வழியாக செல்வதால் அப்பகுதியின் கரையோரத்தில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 85.4 அடி தற்போதைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 83.8 அடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் செங்குன்றம் நீர்தேக்கத்திலிருந்து 1,800 கன அடி நீர் திறக்கப்பட்டு வருவதாகவும், இதனால் திருநீலகண்டன நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள பாதிப்பை தடுக்க மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
english summary-People staying near the banks of Rivers are requested to move to safer places since 6,000 cubic feet of water was released from Chembarambakkam reservoir.