cyclone-251115மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்ட போதிலும் தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகள் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை மறைந்துவிட்டது. ஆனால் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஆங்காங்கே மழைக்கும் வாய்ப்புள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மட்டும் நாம் மழையை எதிர்பார்க்கலாம். சென்னையில், வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமாக 79 செ.மீ. மழை பதிவாகும். ஆனால் இந்தமுறை வழக்கத்தை விடவும் மிக அதிகமாக இதுவரை 114 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று ரமணன் கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய அரசு குழுவினர் நாளை அதாவது நவம்பர் 25ஆம் தேதி வரவுள்ளனர். அவர்கள் முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு சேத விவரங்களை ஆய்வு செய்கின்றனர். மத்திய அரசு ஏற்கனவே தமிழகத்திற்கு முதல்கட்ட வெள்ள நிவாரணமாக ரூ.940 கோடி அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-New depression formed near Sri Lanka!, The rains will continue for another 24 hours in Tamil Nadu & Pudhucherry.