சென்னையில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் வீடுகள், அத்தியாவசிய பொருட்கள், ஆகியவை சேதமானதோடு ஏராளமான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் பழுதாயின. இந்த வாகனங்களை பழுதுபார்க்க டிசம்பர் 12 முதல் இலவச முகாம்கள் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த முகாம்கள் மூலம் எந்தெந்த கடைகளில், வாகனங்களை பழுது பார்க்கலாம் என்ற பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியல் தமிழக அரசின் இணையதளமான http:www.tn.gov.instaservicecentres2wheeler.pdf என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதன்படி இந்த முகாம்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த முகாம்கள் நடைபெறவுள்ளது.
சென்னையில் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் 11 முகவர்களும், யமஹா 21 முகவர்களையும், பஜாஜ் 34-ம், டி.வி.எஸ்., நிறுவனத்தின் 40 முகவர்களும் இலவச பழுது பார்ப்பு முகாமில் பங்கேற்கவுள்ளன.
காஞ்சிபுரத்தில் ராயல் என்பீல்ட் 1-ம், யமஹா 2-ம், பஜாஜ் 3-ம், திருவள்ளூரில் ராயல் என்பில்ட் 1-ம், பஜாஜ் 2-ம் முகாம்களை அமைக்கின்றன.
மழை-வெள்ளம் பாதித்த கடலூரில் ராயல் என்பீல்ட் 1-ம், யமஹா சார்பில் 4-ம், டி.வி.எஸ். சார்பில் 18 முகவர்களும் கட்டணம் இல்லாமல் பழுது பார்ப்புப் பணியை மேற்கொள்ள உள்ளன.
வாகனங்களை பழுது பார்ப்புக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னால், பட்டியலில் உள்ள செல்லிடப்பேசி எண்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட முகவரை அணுகலாம். இதனால், வீண் அலைச்சல் தவிர்க்கப்படும் என்று மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களின் தெரிவித்தனர். பழுதுபார்க்கும் முகாம் குறித்து சில மோட்டார் வாகன நிறுவனங்களின் முகவர்களிடம் கேட்ட போது, வரும் 12 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என்று மட்டுமே மோட்டார் வாகன நிறுவனங்களிடம் இருந்து மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றுள்ளது. முகாமுக்கு வரும்போது எந்தெந்த ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது போன்ற தகவல்கள் இதுவரை வழங்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
English summary-Tamilnadu govt announced list of free bike service centres