சமீபத்தில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக அண்ணா பல்கலைக் கழக தேர்வுகளை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மாணவர்களின் இந்த போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதை அடுத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதன்படி, முதலாம் ஆண்டு முதல் பருவத் தேர்வை எழுதும் மாணவர்கள் அவர்கள் விருப்பப்பட்டால் இப்போது எழுதலாம். இல்லையெனில், இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் முதல் பருவப் பாடங்களை எழுதிக் கொள்ளலாம்.
தொடர் மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக, பல்கலைக்கழகங்கள் பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தன. மழை ஓய்ந்த பின்னர், இணைப்புக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு (2013 நடைமுறை) முதல் பருவத் தேர்வுகளை டிசம்பர் 15 முதல் 21-ஆம் தேதி வரை 6 பாடங்களுக்கான தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதாவது, டிசம்பர் 15-இல் பொறியியல் வேதியியல், 16-இல் பொறியியல் கிராஃபிக்ஸ், 17-இல் பொறியியல் இயற்பியல், 18-இல் தொழில்நுட்ப ஆங்கிலம், 19-இல் கணிதம், 21-இல் கணினி புரோகிராம் என தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், தொடர்ச்சியாக தேர்வுகள் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை நேற்று முன்தினம் முற்றுகையிட்டனர். இதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு நாள் இடைவெளி வரும் வகையில், அதாவது டிசம்பர் 16, 18 ஆகிய இரண்டு தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்தது. ஆனால் இதையும் ஏற்க மறுத்து, மாணவர்கள் போராட்டத்தை இரவு வரை தொடர்ந்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் இருந்து கூறும்போது, “எம்.ஐ.டி. போன்ற கல்லூரிகளுக்கு மட்டும் முதலாமாண்டு முதல் பருவத் தேர்வுகளை ஜனவரிக்கு மாற்றி வைத்துள்ளது. ஆனால், இணைப்புக் கல்லூரிகளுக்கு மட்டும் டிசம்பரில் இடைவெளி இன்றி தொடர்ச்சியாக வரும் வகையில் உள்ளது. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடப் புத்தகங்கள், உடைகள், உடைமைகளை இழந்திருப்பதோடு, தேர்வுக்கு தயாராக முடியாத நிலையில் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இணைப்பு கல்லூரி முதலாமாண்டு முதல் பருவத் தேர்வுகளையும் ஜனவரிக்கு மாற்றி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனால் பல்கலைக்கழக அதிகாரிகள் வேறு வழியின்றி மாணவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். இதன்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 148 கல்லூரிகளில் படிக்கும் முதலாமாண்டு முதல் பருவ மாணவர்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் விருப்பப்பட்டால் இப்போது வெளியிடப்பட்டுள்ள தேர்வு அட்டவணைப்படி தேர்வு எழுதலாம். இல்லையெனில், இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு ஏப்ரல்-மே மாதத்தில் முதல் பருவத் தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். இவ்வாறு எழுதுவதால், “அரியர்’ எழுதுபவர்களாக கருதப்பட மாட்டார்கள். முதல் முறை எழுதுபவர்களாகவே கருதப்பட்டு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்’ என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
English summary-Anna university exams in flood-hit areas postponed to Dec 28