spl-class-151215கடந்த ஒரு மாதமாக பெய்த கனமழை அதன்பின்னர் தொடரந்த பெருவெள்ளம் ஆகியவற்றின் காரணமாக நீண்ட விடுமுறையில் இருந்த பள்ளிகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இருப்பினும் ஒரு மாதகால பாடங்கள் நடத்தப்படாததாலும், வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட புத்தகங்கள் நோட்டுக்கள் காரணமாகவும், வெள்ள பாதிப்பின் மன உளைச்சல் காரணமாகவும், மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. எனவே 10, மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை எண்ணி பயப்பட தேவையில்லை என்றும் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும் என்றும் ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பொதுத்தேர்வில் எளிதில் வெற்றி பெற மாணவர்களுக்கு அரசு எல்லா வகையிலும் உதவி செய்யும் என்றும் தேர்வு பயம் இல்லாமல் பொது தேர்வை சந்திக்கக்கூடிய ஆலோசனைகளை கவுன்சிலிங் குழு வழங்கும் என்றும் இந்த வாய்ப்பை மாணவர்கள் நன்றாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும் என்றும் கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியபோது, “அனைத்து மாணவர்களும் பொது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக “குறைந்தபட்ச தேர்ச்சி பாட திட்ட கையேடு” வழங்கப்படும். இது மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். இதை படித்தாலே அனைத்து மாணவர்களும் எளிதில் வெற்றி பெறலாம். இந்த கையேட்டில் அனைத்து பாடங்களுக்குரிய முக்கியமான கேள்வி பதில்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இந்த கையேடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் இலவசமாக வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம். இது தவிர, சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம்

இவ்வாறு சபீதா கூறினார்.
English summary-Special classes will be conducted for students appearing for board exams this year.