சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் தீ விபத்து நடந்த பகுதியில் ஆய்வு முடிவு திருப்தி அளிக்கும் வரை அந்த மருத்துவமனையின் 213வது வார்டு இயங்காது என்று மருத்துவமனையின் டீன் அறிவித்துள்ளார்.
சென்னை அரசு பொது மருத்துவமனை 213வது வார்டில் நேற்று முன்தினம் அதிகாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த 16 நோயாளிகள் உடனடியாக வேறு வார்டுகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வார்டு மாற்றப்பட்ட நோயாளிகளில் பாண்டுரங்கன், மண்ணம்மாள், ராஜா ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்ததால் உயிரிழப்புக்கு காரணம் உடல்நிலைக்கோளாறு தான் என்றும், தீ விபத்துக்கும் நோயாளிகளின் மரணத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் ஆஸ்பத்திரி ‘டீன்’ கூறியிருந்தார்.
தீ விபத்து நடந்த வார்டில் தொடர்ந்து சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. சுவரில் புகை படிந்த இடங்களில் பெயிண்ட் அடிக்கப்பட்டது. மின்கசிவு ஏற்பட்ட இடங்களில் புதிய மின் வயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணி மற்றும் ஆய்வு நடந்து வருவதால் அந்த வார்டுக்கு செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆய்வின் முடிவு திருப்தி அளித்தால் தான் வார்டு இயங்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குனரும், சென்னை அரசு பொது மருத்துவமனை டீனுமான டாக்டர் ஆர்.விமலா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மருத்துவமனையின் முக்கிய வார்டுகளில் ஒன்றான 213–வது வார்டில் நடந்த தீ விபத்து குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை பொறுத்தவரை நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். வார்டில் உள்ள பிற மின் கருவிகளிலும் சோதனை நடந்து வருகிறது. இதுகுறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டிருக்கிறோம். ஆய்வின் முடிவு திருப்தி அளித்தால் மட்டுமே அந்த வார்டு இயங்கும். அதுவரை அந்த வார்டு செயல்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
English Summary: when start a Fire accident ward of the government hospital in Chennai ? Dean Information.