வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து தமிழக காவல் துறையில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டதை அடுத்து தமிழகம் முழுவதும் 123 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பணிமாற்றம் செய்யப்பட்ட 123 காவல்துறை அதிகாரிகளும் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
காவல்துறை அதிகாரிகளை போலவே தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இடமாற்றம் செய்ய தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். நேற்று தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது;-
1 ஊரக சுகாதார திட்ட இயக்குனராக முன்பு பணியாற்றிய ஷம்பு கல்லோலிகர், வேளாண்மை தொழில் மற்றும் சந்தையியல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை மாநகராட்சியின் முன்னாள் துணை கமிஷனர் ஆர்.லலிதா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் துணைச்செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
3. டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் கமிஷனர் தயானந்த் கட்டாரியா, மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார். அவர் சிறுபான்மை நலன் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் ஏ.சுகந்தி, ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. பட்டுப்புழு வளர்ப்பு முன்னாள் இயக்குனர் பி.செந்தில்குமார், கால்நடை, பால்வளம், மீன்வளத்துறையின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணைக்கமிஷனர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் துணைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
7. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹேமந்த் குமார் சின்ஹா, டான்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.
8. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் முன்னாள் இணைச்செயலாளர் சுப்பிரியா சாகு மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ளார். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக அவர் நியமிக்கப்பட்டார்.
9. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் துணைச்செயலாளர் பிரவீன் பி.நாயர், சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
10.பள்ளிக் கல்வித்துறையின் துணைச்செயலாளர் சுபோத்குமார், சென்னை மாநகராட்சியின் மத்திய மண்டல துணைக் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
11.பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேந்திர ரத்னூ, வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
12.நிதித்துறை துணைச்செயலாளர் பிரஷாந்த் எம்.வத்னேர், 5-வது நிதிக்கமிஷனின் உறுப்பினர் செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
13.தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் சுமிதா நாகராஜ், மத்திய பாதுகாப்புத் துறையில், டைரக்டர் ஜெனரலாக (கையகப்படுத்துதல்) மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
English Summary: 123 DSP and 13 IAS Officers transferred due to election.