தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகியவற்றின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அவர்கள் தலைமையிலான மத்திய தேர்தல் ஆணையர்கள் குழு பிப்ரவரி 9-ஆம் தேதி தமிழகம் வருகிறது. பிப்ரவரி 10,11 ஆகிய தேதிகளில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக சென்னையில் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தி அதன்பின்னர் தேர்தல் தேதியை அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 22ஆம் தேதி நிறைவு பெறுகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் மத்திய தேர்தல் ஆணையர்கள் புதுடெல்லியில் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினர். அப்போது தேர்தல் நடைபெறும் காலத்தில் பாதுகாப்பு, பருவ நிலை, அரசியல், சமூக சூழ்நிலைகள், வாக்காளர்களின் நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகளுடன் அவர்கள் விவாதித்தனர்.
இந்த விவாதத்தை அடுத்து தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் தேர்தல் ஆணையர்கள் அச்சல் குமார் ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோர் அடங்கிய குழுவினர் தமிழகத்தில் நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். இதன்படி பிப்ரவரி 10, 11 ஆகிய நாள்களில் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தலைமைத் தேர்தல் அதிகாரி, தேர்தல் மாவட்டப் பொறுப்பாளர்களான அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், ஊர்க்காவல் படையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்
தமிழக தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணைய உயரதிகாரி கூறியதாவது: தமிழகம், புதுச்சேரியில் உள்ள அரசியல், சமூக நிலவரம், ஆண்டு கல்வித் தேர்வுகள், பண்டிகைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு எந்தத் தேதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தலாம்? தேர்தல் பணிக்காக எவ்வளவு அதிகாரிகள் வெளி மாநிலங்களில் இருந்து தேவைப்படுவர்? பதற்றம் நிறைந்த தொகுதிகளில் எவ்வளவு கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும்? மத்திய துணை ராணுவப் படைகள் எவ்வளவு தேவைப்படும்? என்பவை குறித்து தமிழக வருகையின் போது அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துவர் என்றார் உயரதிகாரி.
தற்போதைய நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைக்கு மே இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடத்தும் வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதையொட்டி, மார்ச் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்கும் யோசனையையும் ஆணையம் பரிசீலித்து வருகிறது. இவை தொடர்பாகவும் தமிழக பயணத்தின் போது தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தும். தில்லி திரும்பியதும் மத்திய பணியாளர் நலன், உள்துறை, தொலைத் தொடர்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தும். பின்னர் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளையும் தில்லிக்கு அழைத்து தேர்தல் தேதியை இறுதிப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அதன் பிறகு தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முறைப்படி அறிவிப்பார் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
English Summary: When will be election for Tamilnadu and Pondicherry? Election commission meeting will be commenced on February 10th, to consult the dates for Election.