voters listதமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் வரவுள்ளதை அடுத்து சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை வரும் 10-ஆம் தேதி முதல் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் நடத்தவுள்ளதாகவும் இந்த ஆலோசனையில் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சிகளை அடுத்து தமிழக தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் உள்பட பல்வேறு தரப்பினர்களுடன் தேர்தல் குறித்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

சட்டமன்ற தேர்தலையொட்டி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, ஆணையாளர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் வரும் 9-ஆம் தேதி புதுச்சேரி வருகின்றனர். 10 ஆம் தேதி சென்னை வருகிறார்கள். அன்று மாலை 6.30 மணிக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதநிதிகளை தனித்தனியாக சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 11-ஆம் தேதி காலை 10 மணியில் இருந்து 11 மணி வரையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, வருமான வரித் துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகிறார்கள். மாலை 3 மணிக்கு தலைமைச் செயலாளர், காவல் துறை இயக்குநர் ஆகியோருடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

போலி வாக்காளர்கள் குறித்து ஆன்லைன் மூலமும் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட பின்னர் இதுவரை 1,200 புகார்கள் வந்துள்ளன. இதுபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 17 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இறந்த வாக்காளர்கள் தொடர்பாக அவர்களின் பெயர்களை நீக்கும் பணி தொடந்து நடைபெற்று வருகிறது. ஒரு வாக்காளர் பெயர் இரண்டு இடத்தில் பதிவாகியுள்ளதைத் தடுக்க இப்போது புதிய முறை நடைமுறைப்படுத்தபடுகிறது. இதன்படி 20 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்கள் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் கொண்டுவந்தால் அவர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த வாக்காளர் அட்டையின் எண்ணை குறிப்பிடவேண்டும். அந்த பெயர் நீக்கப்பட்ட பின்னர்தான் புதிதாக பெயர் சேர்க்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் இரு இடங்களில் பெயர்கள் இருப்பது நீக்கமுடியும். மேலும் இரு தொகுதியில் பெயர்களை வைத்துள்ள வாக்காளர்கள் தங்களுக்கு எந்த தொகுதி தேவையே அதை வைத்துக் கொண்டு மற்ற தொகுதியில் உள்ள பெயரை நீக்க விண்ணப்பம் அளிக்கவேண்டும். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குபதிவு இயந்திங்கள் பெருமளவு வந்துவிட்டன. தற்போது சென்னைக்கு வந்துள்ள இயந்திரங்களை சோதனை செய்யும் பணி வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.

வாக்கு அளித்தற்கான ஒப்புகைச் சீட்டை பார்க்கும் முறை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறை 17 மாவட்டங்களில் அவற்றின் தலைநகர்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் 68 ஆயிரத்து 196 வாக்குச் சாவடிகள் உள்ளன. கடந்த தேர்தலைக் காட்டிலும் இப்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குச் சாவடிகள் அதிகரித்துள்ளன. இவ்வாறு தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.

English Summary: New method to prevent the same voter registration in the name of 2 places. Chief Electoral Officer Information.