pallavaram5216சென்னையின் மிக முக்கிய புறநகர் பகுதிகளான மீனம்பாக்கம், திரிசூலம், பல்லாவரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் தொல்லியல் துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், தடயங்கள், கண்டுபிடிப்புகளுக்கான ஆதாரங்கள் புதைந்து இருப்பதாக தகவல்கள் வந்ததை அடுத்து அந்த பகுதி மக்களுக்கு தொல்லியல் துறை சில கட்டுப்பாடுகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விதித்தது.

தொல்லியல் துறையின் இந்த கட்டுப்பாடு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாவரம், செம்பாக்கம் நகராட்சிகளைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய தொல்லியல் குழுவினர் விரைவில் வருகை தரவுள்ளதாக ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தொல்லிய துறையின் புதிய கட்டுப்பாடு காரணமாக அந்தப் பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி காலங்காலமாக குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் 300 மீட்டர் சுற்றளவில் புதிதாக எவ்வித மறுசீரமைப்பு,கட்டுமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளுக்கும் அறிவுறுத்தப்பட்ட உத்தரவால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். தங்களது சொத்துகளை பாதுகாக்க, விற்க, மறுசீரமைக்க முடியாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த பகுதிகளைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்பதாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பல்லாவரம், செம்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசியல், சமூக பொதுநல அமைப்புகள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இப்பகுதிக்கான மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் இந்த பிரச்னை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

மத்திய தொல்லியல் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, தொல்லியல் துறை அதிகாரிகளுடன் இவ்விவகாரம் குறித்து பேசினேன். பெங்களுரு சென்று தடையில்லா சான்று பெறுவதிலும் பல்வேறு சிரமங்கள், தடைகள் இருப்பதால், பொதுமக்களின் குறையைத் தீர்க்க மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆய்வுக்குழுவை அனுப்பி வைக்குமாறு கடந்த திங்கள்கிழமை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இந்த நடவடிக்கைக்கு பின்னர் தொல்லியல் துறையினர் விரைவில் இந்த பகுதிக்கு வருகை தந்து ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வுக்கு பின்னர் இந்த பிரச்சனை சரிசெய்யபடும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

English Summary:Archaeological Mission to Vist Pallavaram amd sembakkam municipal.