உலகின் நம்பர் தேடுதள இணையதளமான கூகுள் நிறுவனம் சமீபத்தில் கணினி மென்பொருள் குறியீடு குறித்து நடத்திய போட்டியில் சென்னை பள்ளி மாணவன் ஸ்ரீ கிருஷ்ணா மதுசூதன் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கூகுள் நிறுவனம் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து 5 வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவர்களுக்கு கணினியில் உள்ள குறியீடுகளை உருவாக்கும் “கோட் டு லேர்ன்’ என்ற போட்டியை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டுக்கான போட்டியில் 5, 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பிரிவில், சென்னையை அடுத்த பெருங்குடி பிவிஎம் குளோபல் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் முதலிடம் பிடித்துள்ளார். இவர், கணினியில் துப்பாக்கியைக் கொண்டு சுடும் ஒரு வகையான விளையாட்டை உருவாக்கியதற்காக முதலிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இது குறித்து மாணவர் ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எங்கள் பள்ளியில், 4-ஆம் வகுப்பு முதலே ரோபோடிக் தொழில்நுட்பம், அதற்கான குறியீடுகளை உருவாக்குவது குறித்து பயிற்றுவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி அறிவிப்பு வெளியானவுடன், விளையாட்டை உருவாக்குவதற்கான குறியீடுகளை உருவாக்கினேன்.
தொடர்ந்து இதே தொழில்நுட்பத்தில் மேம்பட்ட கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார். கூகுள் போட்டியில் முதலிடம் பிடித்துள்ள ஸ்ரீகிருஷ்ணா மதுசூதனனுக்கு பள்ளி முதல்வர் தேப்ஜனா கோஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
English Summary: Chennai Student first Place in Google’s Competition.