சமீபத்தில் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு ஒன்றில் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் ஒரே பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த உத்தரவுக்கு சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. அதே சமயம் தமிழக அரசின் இடங்களுக்கு மத்திய அரசு நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் உள்ள 406 மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக 90-க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிவதால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரே நுழைவுத் தேர்வின் மூலமே இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்கள், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், ராணுவ மருத்துவக் கல்லூரிகள் இடங்கள் என அனைத்தையும் சேர்க்க வேண்டும்.
தமிழக அரசிóன் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவக் கல்வி இடங்களுக்கு மத்திய அரசின் நுழைவுத் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும். தமிழக அரசின் இடங்களுக்கு மத்திய அரசின் நுழைவுத் தேர்வை திணிக்கக் கூடாது. நுழைவுத் தேர்வை ஒரு போட்டித் தேர்வாக மட்டுமே நடத்த வேண்டும். அதை ஒரு தகுதிகாண் தேர்வாக மாற்றக்கூடாது.
போட்டித் தேர்வுகளை எழுதி வெற்றி பெறும் வகையில் தமிழக அரசு கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: Social equality doctors association welcomes the Common Medical Entrance exam to join in colleges.