தமிழகம் உள்பட இந்தியாவின் மின் தேவைக்கு பெரிதும் பங்களிக்கும் விதமாக செயல்பட்டு வரும் காற்றாலைகளை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள 7600 கிமீ நீள கடற்பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் குஜராத் மாநிலம், கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கிலோமீட்டர் வேகத்திலும், தமிழக கடல்பகுதியில் ராமேசுவரம், கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 29 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அயல்நாடுகளில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் கடலுக்குள் மிதக்கும் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தின்படி கடற்கரையில் இருந்து கடலுக்குள் இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்குள் மிதக்கும் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டம் குறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் வி. கிருபாகரன் அவர்கள் கூறியதாவது:
காந்திகிராம பல்கலைக்கழக எம்.டெக். மாணவர் கோபிநாத், மாணவர் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் சுவீடன் நாட்டில் உள்ள உப்சலா பல்கலைக்கழகத்துக்கு படிக்கச் சென்றார். அங்கு கடல் பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்துள்ளார். கடலுக்குள் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை, மத்திய அரசு 2015 செப்டம்பர் 9ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான ஆய்வின் முடிவில் இந்தியாவில் அதிக காற்று வீசும் கடற்கரை உள்ள மாநிலங்களாக குஜராத் மற்றும் தமிழகம் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக குஜராத் கடல் பகுதியிலும், அடுத்தகட்டமாக தமிழகத்தில் உள்ள ராமேசுவரம், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் மிதக்கும் காற்றாலைகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம் ஆண்டு முழுவதும் முழு நேரமும் மின்சாரம் தயாரிக்க முடியாது. 50 சதவீதம்தான் சாத்தியம். ஆனால், கடலுக்குள் அமைக்கப்படும் காற்றாலைகள் மூலம் ஆண்டு முழுவதும் முழுநேரமும் மின்சாரம் தயாரிக்க முடியும். கடற்கரை பகுதியில் ஆண்டு முழுவதும் காற்று வீசிக்கொண்டிருக்கும். ஒரு மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் வகையில் கடலுக்குள் ஒரு காற்றாலை அமைக்க ரூ. 10 கோடி வரை செலவாகும். இது நிலப்பரப்பில் அமைக்கப்படும் காற்றாலையை விட கூடுதல் செலவு என்றாலும், அதைப் போல் இரண்டரை மடங்கு மின்சாரத்தை இடைவிடாமல் ஆண்டு முழுவதும் பெறமுடியும்’ என்று கூறினார்.
உலகளவில் கடலுக்கும் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிப்பதில் அமெரிக்கா முதலிடமும், டென்மார்க் இரண்டாமிடமும், ஜெர்மனி மூன்றாமிடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary-Wind mills to setup over seas around Tamilnadu