Ponmagan--scheme18216-1இந்திய அஞ்சல் துறை சமீபத்தில் பெண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக செல்வமகள் சேமிப்புத்திட்டம் என்ற திட்டத்தையும், ஆண் குழந்தைகளின் எதிர்கால தேவைக்காக பொன்மகன் சேமிப்பு திட்டம் என்ற திட்டத்தையும் தொடங்கியது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாக பணம் எடுக்க விரும்பினால், பணம் செலுத்திய தொடக்க தேதியில் இருந்து குறைந்தபட்சம், 5 வருடங்கள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை பெறும் வசதி தற்போது அறிமுகம் செய்யபட்டுள்ளது.

இதுகுறித்து தபால் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

8.7 சதவீதம் வட்டி 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாவலர் உதவியோடும், 10 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகள் தானாகவே வந்து பொன்மகன் பொது வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க வயது வரம்பு கிடையாது. குறைந்த பட்சம் ரூ.100 பணம் செலுத்தி கணக்கை தொடங்கலாம். கணக்கு தொடங்கியதில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

குறைந்த பட்சம் ரூ.500 மற்றும் அதிகபட்சம் முதலீடாக ரூ.1 லட்சம் வரை ஒரு ஆண்டில் சேமிக்கலாம். இந்த சேமிப்பு கணக்குகளுக்கு 8.7 சதவீதம் வட்டி தற்போதைய நிதியாண்டில் வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை. கணக்கு தொடங்கிய உடன் 3வது ஆண்டில் இருந்து கடன் வசதியும் உள்ளது.

கணக்கு தொடங்கியதில் இருந்து 7வது ஆண்டில் இருந்து 50 சதவீத தொகையை பெற்றுக்கொள்ளலாம். இதை திருப்பி செலுத்த வேண்டியதில்லை. 15 ஆண்டுகள் முடிந்த உடன் கணக்கை முடித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் முதிர்வு தேதிக்கு முன்பாக, பணம் செலுத்திய தேதியில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தால் பணத்தை திரும்ப பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கு உரிய காரணத்தையும் கூற வேண்டும். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கு அளிக்கப்படுவதுடன், உரிய வட்டியும், வட்டிக்கு வரிவிலக்கும் அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அஞ்சல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
English summary-Premature closure option for Ponmagan Podhuvaippu Nidhi scheme