ஐ.ஐ.டியில் படிக்க வேண்டும் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவர்களின் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் இந்திய மாணவர்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பு அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டு மாணவர்களுக்கும் கிடைக்கவுள்ளது. அதாவது அடுத்த ஆண்டு முதல் வெளி நாட்டு மாணவர்களை ஐ.ஐ.டி.யில் சேர்ப்பதற்கான நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் பாகிஸ்தான் உட்பட சார்க் நாடுகளில் இந்த தேர்வை நடத்த மத்திய அரசு திட்ட மிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை மற்றும் வெளியுறவுத்துறை மூத்த அதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி அடுத்த ஆண்டு முதல் வெளிநாடுகளிலும் ஐஐடி சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும் முதல்கட்டமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம், பூடான், மாலத்தீவு, வங்கதேசம் ஆகிய சார்க் நாடுகள் மற்றும் சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலும் இந்த நுழைவுத் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதற்கு முன்பு வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஐஐடி நுழைவுத் தேர்வு மூலம் இந்திய குடியுரிமை பெற்ற மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். முதல்முறையாக வெளிநாட்டு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி வரும் 2017ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் ஜேஇஇ/கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கூறினார். வெளிநாட்டு மாணவர்கள் ஐஐடியில் சேர்க்கப்பட்டாலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary: Next Year onWards Foreign students in IIT.