fullbodycheckup4316தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில் நேற்று அவர் தொடங்கி வைத்த மற்றொரு திட்டம் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம். ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் குறைந்த செலவில் தங்கள் உடலை முழுவதுமாக பரிசோதனை செய்ய இந்த திட்டம் பெரிதும் பயனளித்து வருகிறது. ஒவ்வொரு பரிசோதனைக்கும் ஒவ்வொரு இடத்திற்கு அலையாமல் முழு உடல் சோதனைகளையும் ஒரே இடத்தில் செய்து கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் உள்ளது.

அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

நேற்று ஆரம்பிக்கபட்ட முதல் நாளிலேயே பொதுமக்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றனர். வயதானவர்கள், பெண்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு வரும்போது மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். அதனால் அவர்களை அலைக் கழிக்காமல் ஒரே இடத்தில் அனைத்து சோதனைகளையும் செய்து அனுப்பும் வகையில் இந்த பரிசோதனை கூடம் அமைந்துள்ளது.

முதல் நாளான நேற்று உடல் பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனையில் பல பெண்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு சிறந்த முறையில் நவீன கருவிகளில் உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனை திட்டம் 3 வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை அம்மா கோல்ட் முழு ரத்த பரிசோதனை திட்டம், அம்மா டைமண்ட் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா பிளாட்டினம் சிறப்பு பெண்கள் பரிசோதனை திட்டம் ஆகியவை ஆகும்.

இந்த பரிசோதனையை தனியார் மருத்துவமனைகளில் செய்வதாக இருந்தால் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கும் மேலாக செலவாகும். ஆனால் அரசு ஆஸ்பத்திரியில் அம்மா கோல்ட் முழு ரத்த பரிசோதனை ரூ.1000 கட்டணத்தில் செய்யப்படுகிறது.

ரத்த பரிசோதனை (சாப்பிடுவதற்கு முன் மற்றும் சாப்பிட்டபின்), சிறுநீரக ரத்த பரிசோதனை, ரத்த கொதிப்பு பரிசோதனைகள், கல்லீரல் ரத்த பரிசோதனை, ஹெப்படைடிஸ் ‘பி’ ரத்த பரிசோதனை, நெஞ்சு சுருள் படம், எக்ஸ்ரே, கருப்பை பரிசோதனை இதில் அடங்கும். இந்த பரிசோதனை செய்ய வருபவர்களுக்கு காலை உணவு ஆஸ்பத்திரியில் இலவசமாக வழங்கப்படும்.

அம்மா டைமண்ட் பரிசோதனைக்கு ரூ.2000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ‘அம்மா கோல்ட்’ பரிசோதனையுடன் மின்ஒலி இதயவரைவு, எக்கோஇ பி.எஸ்.ஏ. தைராய்டு பரிசோதனைகள், ஹெச்.பி.ஏ1.சி போன்ற பரிசோதனைகள் செய்யப்படும்.

அம்மா பிளாட்டினம் சிறப்பு பெண்கள் பரிசோதனைக்கு ரூ.3000 கட்டணமாகும். அம்மா டைமண்ட் பரிசோதனையுடன் எண்ணியல் மார்பக சிறப்பு பரிசோதனை, டெக்ஸா ஸ்கேன், எலும்பு உறுதிதன்மை சோதனை செய்யப்படும். காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பரிசோதனை மேற்கொள்ளப்படும். பரிசோதனை முடிவுகள் மறுநாள் வழங்கப்படும்.

அம்மா முழு உடல் பரிசோதனை செய்ய நேரில் மட்டுமின்றி ஆன்லைன் மூலமாகவும் பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் ஆஸ்பத்திரிக்கு வரலாம். பரிசோதனை முடிவுகளும் ஆன்லைனில் தெரிவிக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று பொது மருத்துவமனை டீன் விமலா தெரிவித்தார்.

English Summary: online Registration for amma full body checkup Scheme.