சென்னை நகரின் புதிய அடையாளமாக கடந்த ஆண்டு முதல் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையில் தொடங்கப்பட்டுள்ள மெட்ரோ ரயில் போக்குவரத்து சென்னை மக்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் சென்னை விமான நிலையம் – எழும்பூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உயர்நிலை, சுரங்கப் பாதையில் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் ஷெனாய்நகர் – திருமங்கலம் இடையிலான சுரங்கப் பாதைப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, தற்போது சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. மேலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு உயர்நிலைப் பாலத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகளும் முழுமையாக முடிவடைந்துவிட்டன.
ஷெனாய் நகரில் இருந்து 2012-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் ஷெனாய் நகரிலிருந்து அண்ணாநகர் கிழக்கு, அண்ணாநகர் டவர், திருமங்கலம் இடையே சுரங்கப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தொலைவு வரை “டனல் போரிங்’ இயந்திரம் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. சுரங்கம் தோண்டுவதால் வெளிவரும் மண் தினமும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
சுரங்கப் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சுமார் 90 சதவீத ரயில் நிலையப் பணிகள் சுரங்கத்தில் முடிவடைந்துள்ளன.
2007 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடங்கப்பட்ட போது திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாக இருந்தது. இப்போது இதன் திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
சென்னையில் சுரங்கப் பாதைப் பணியை மேற்கொள்வது சவாலான விஷயம். இங்கு மண், பாறை என வெவ்வேறு இடங்களில் நிலத்தின் தன்மை மாறுபடும். இதன் காரணமாக, சுரங்கம் தோண்டும் “டனல் போரிங்’ இயந்திரத்தின் பிளேடுகள் அதிகமாகச் சேதமடையும்.
கோயம்பேடு- எழும்பூர் இடையிலான வழித்தடத்தில் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வருகிற ஜூன் மாதம் தொடங்கப்படும்.
மேலும், விமான நிலையம்- எழும்பூர் இடையிலான 9 கிலோ மீட்டர் தொலைவு உயர்நிலை மற்றும் சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து வருகிற டிசம்பரில் தொடங்கப்படும்.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக சற்று பாதிக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பணிகள், இப்போது திட்டமிட்டபடி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary: December onwards Metro Train starts Between Chennai Egmore – Airport.